திருவண்ணாமலையில் நடைபயிற்சியின்போது வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவண்ணாமலையில் நடைபயிற்சியின்போது தி.மு.க. வேட்பாளருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்.
திருவண்ணாமலை,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் இன்று காலை திருவண்ணாமலை தேரடி வீதியில் நடைபயிற்சி செய்தார். அப்போது, பொதுமக்களை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவு திரட்டினார்.
ராஜகோபுரம் அருகே உள்ள வியாபாரிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அருகில் உள்ள தேநீர் கடைக்கு சென்று தேநீர் அருந்தினார். அப்போது, பள்ளி மாணவிகள், பல தரப்பட மக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.