தி.மு.க.வும், காங்கிரசும் தங்கள் குடும்பத்துக்காக உழைக்கிறார்கள் - ராஜ்நாத்சிங்


தி.மு.க.வும், காங்கிரசும் தங்கள் குடும்பத்துக்காக உழைக்கிறார்கள் - ராஜ்நாத்சிங்
x

கோப்புப்படம்

தி.மு.க.வும், காங்கிரசும் வாரிசு அரசியல் நடத்துவதாக நாமக்கல்லில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளராக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று நாமக்கல்லில் பா.ஜனதா சார்பில் நடைபெற்ற வாகன பேரணியில் (ரோடு ஷோ) மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், திறந்த ஜீப்பில் நின்றவாறு பொதுமக்களை பார்த்து கையசைத்து, தாமரை சின்னத்திற்கு ஓட்டுக்கேட்டார்.

பின்னர் நாமக்கல் பஸ் நிலையம் அருகில், திறந்த ஜீப்பில் நின்றவாறு பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், "தமிழ் கலாசாரம் மிகச்சிறந்த பாரம்பரியம் மிக்க கலாசாரம் ஆகும். காங்கிரஸ் ஆட்சியில் 70 ஆண்டுகளில் இந்தியாவுக்கு செய்ய முடியாத பல நலத்திட்டங்களை பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் செய்து முடித்து உள்ளார். அதனால் பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் அனைவரும் மரியாதை தருகின்றனர்.

2014-ம் ஆண்டுக்கு முன்பு, இந்தியா பொருளாதாரத்தில் உலக அளவில் 11-வது இடத்தில் இருந்தது. தற்போது 5-வது இடத்திற்கு வந்து உள்ளது. உலகத்தின் மிகப்பெரிய நாடுகள் எல்லாம் நமக்கு பின்னால் இருக்கின்றன. 2027-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் உலக அளவில் 3-வது இடத்திற்கு வருவது உறுதி.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்கள் பெற்று ஆட்சி அமைத்தோம். இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று, மோடி 3-வது முறையாக பிரதமராக ஆட்சி அமைப்பார் என்பது உறுதி.

தமிழகத்தில் உள்ள தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் வாரிசு அரசியல் நடத்திக்கொண்டு இருக்கின்றன. இதற்காக அவர்கள் கூட்டணி அமைத்து தங்களது குடும்பம் முன்னேறுவதற்காக பாடுபடுகின்றனர்.

குடியுரிமை சட்ட திருத்தம் மூலம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினருக்கும் பாதுகாப்பு அளித்து, இந்தியாவை விட்டு வெளியேற வேண்டாம் என அவர்களுக்கு உத்தரவாதம் அளித்து உள்ளோம். முத்தலாக் முறையை ரத்து செய்து முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளோம்.

நாம் உலக அளவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல, நமது விமானப்படை, தரைப்படை உள்ள அனைத்து ராணுவ பிரிவுகளும் மிகவும் பலம் மிக்கது. நாம் ராணுவ தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். தற்போது எவ்வித ராணுவ தளவாடங்களும் இறக்குமதி செய்யப்படுவதில்லை.

பிரதமர் மோடி தலைமையில், வருகிற 2047-ம் ஆண்டில் இந்தியா பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் அதிக சக்தி கொண்ட மிகப்பெரிய நாடாக மாறும். எனவே வரும் தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை ஆதரிக்க வேண்டும்" என்று அவர் பேசினார்.

1 More update

Next Story