தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை,
நீலகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து கோவை காரமடை பகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும், தி.மு.க.வும்தான், ஆனால் தி.மு.க.வினர் பொய் பேசி நீட் தேர்வை எதிர்க்கின்றனர். நீட் தேர்வை தடுத்த நிறுத்த போராடியது அ.தி.மு.க.தான். தி.மு.க.வில் உழைத்து ஓடாய் தேய்ந்தவர்களுக்கு பதவி கிடைக்காது; வாரிசுகளுக்குதான் பதவி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். மக்களுக்கான ஆட்சியை கொடுத்தது அ.தி.மு.க.தான்.
அ.தி.மு.க. பதவிக்கு ஆசைப்படவில்லை. அதிகார ஆசை இருந்திருந்தால் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் தொடர்ந்திருப்போம். எங்களுக்கு அதிகார ஆசை இல்லை. சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'இந்தியா' கூட்டணி, 'இந்தியா' கூட்டணி என்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.