தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து தி.மு.க. வழக்கு - ஐகோர்ட்டில் நாளை விசாரணை


தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து தி.மு.க. வழக்கு - ஐகோர்ட்டில் நாளை விசாரணை
x

‘இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள வழக்கில் , "தேர்தல் விளம்பரங்களை வெளியிடும் முன்பாக தேர்தல் ஆணையத்திடம் முன்அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யும் தேர்தல் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பங்களை மாநில தலைமை தேர்தல் அதிகாரி, 2 நாட்களுக்குள் பரிசீலித்து சான்றளிக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் செய்யப்பட்டுள்ள முக்கிய சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக தேர்தல் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரங்களுக்கு முன்அனுமதி கோரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தி.மு.க. சார்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவு எடுக்க 6 நாட்கள் வரை காலதாமதம் செய்கிறது. சில விண்ணப்பங்களை ஒன்றுமில்லாத அற்ப காரணங்களுக்காக நிராகரித்துள்ளது.

குறிப்பாக, 'இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்' என்ற தேர்தல் விளம்பரத்துக்கு முன்அனுமதி கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை, நாட்டின் இறையாண்மைக்கு எதிராக உள்ளதாகக்கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் மற்ற அரசியல் கட்சிகளின் விளம்பரங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனவே தி.மு.க.வின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன்அனுமதி வழங்க மறுத்து மாநில தலைமை தேர்தல் ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவுகளை ரத்துசெய்ய வேண்டும். அதேபோல தி.மு.க.வின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன்அனுமதி வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று அதில் அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.


Next Story