எனக்கு கேளிக்கைகள் கிடையாது; கடின உழைப்பு மட்டுமே - பிரதமர் மோடி பேச்சு
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கைபோல் இருக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
பாட்னா,
பீகார் மாநிலம் நவாடாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் முழுவதும் வெற்றி பெறப்போகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வலுவான அரசு நாட்டுக்காக துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனக்கு கேளிக்கை விஷயங்கள் கிடையாது; நான் கடினமாக உழைப்பதற்காக பிறந்தவன். மக்களை சந்திப்பதன் மூலம் எனக்கு ஆற்றல் கிடைக்கிறது; உத்வேகம் கிடைக்கிறது. அதனால்தான் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறேன்.
அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதன்படி இன்று ராமர் கோவிலின் சிகரம் விண்ணைத் தொடுகிறது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் வரவில்லை என்பதை யாரும் மறக்க வேண்டாம்.
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் செய்யாததை கடந்த 10 ஆண்டுகளில் செய்துள்ளோம். இது வெறும் டிரெய்லர்தான்; நாம் இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. மோடியின் கேரண்டிகளை பார்த்து 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியில் இருக்கின்றன. என்னுடைய நோக்கம் தூய்மையானது என்பதால் வாக்குறுதி அளிக்கிறேன்.அதை நிறைவேற்ற கடுமையாக உழைக்கிறேன்.
'இந்தியா' கூட்டனியில் உள்ளவர்கள், இதை புரிந்து கொள்ள மாட்டார்கள். தேர்தலில் பொய் சொல்லி வாக்கு சேகரிப்பதில் பெயர் பெற்றவர்கள். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கைபோல் இருக்கிறது.
வரும் 2024 தேர்தல் மிகவும் முக்கியமானது. கடந்த 10 ஆண்டுகளில் பீகாரில் நவீன உள்கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. நவீன விரைவுச் சாலைகள், ரெயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படுகின்றன, வந்தே பாரத் போன்ற ரெயில்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.