நீலகிரி அ.தி.மு.க.,வின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி


நீலகிரி அ.தி.மு.க.,வின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும் -  எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 4 April 2024 2:26 PM IST (Updated: 4 April 2024 4:21 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தை அதிகமாக நேசித்தவர், ஜெயலலிதா என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நீலகிரி,

நீலகிரி தொகுதி வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதரித்து அ.தி.மு.க., பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஊட்டியில் பேசியதாவது:

நீலகிரி மாவட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிடித்த மாவட்டம். அ.தி.மு.க.,வின் கோட்டை. இங்கு அ.தி.மு.க., ஆட்சியின் போது பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

அதில், கடந்த, 50 ஆண்டு பிரச்சினையான மருத்துவ கல்லுாரி திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு அப்போலோ மருத்துவனையை போல அதிநவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த கல்லுாரியை நாங்கள் கொண்டு வந்தால் அதனை தி.மு.க., கொண்டு வந்ததை போல முதல்-அமைச்சர் திறந்து வைத்ததாக பிரசாரம் செய்கின்றனர். இது நான் பெற்ற பிள்ளைக்கு, அவர்கள் பெயர் வைத்தது போன்றதாகும். நாங்கள் கொண்டு வரும் திட்டங்களுக்கு அவர்கள் 'லேபிள்' ஒட்டுகின்றனர்.

ஆ.ராசாவுக்கு ஓட்டுப் போட்டு எந்த பயனும் இல்லை. ஆ.ராசா மந்திரியாக இருந்தபோது கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தார். ரூ.1.75 லட்சம் கோடி முறைகேடு செய்ததற்காக ஆ.ராசாவை காங்கிரஸ் ஆட்சி சிறையில் அடைத்தது. அவர் மீதான முறைகேடு வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. அவர் இங்கே இருப்பாரா அங்கே இருப்பாரா என தெரியாது.

தி.மு.க.,வில் ஒவ்வொருவரும் ஊழல் செய்ததற்காக சிறை செல்கின்றனர். ஆ.ராசாவும் சிறை செல்வார். தி.மு.க., ஊழல் கட்சி. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க அரசு. ஊர் ஊராக சென்று என்னையும், அ.தி.மு.க.,வையும் குறை சொல்லிக் கொண்டு இருக்கும் ஒருவர் விரைவில் சிறை செல்வார் என தகவல் வெளியாகி உள்ளது.

3 ஆண்டு ஆட்சியில் சாதனை திட்டங்கள் இல்லாததால், கடந்த 10 நாட்களாக அ.தி.மு.க.,வை ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். அ.தி.மு.க., ஆட்சியை இருண்ட ஆட்சி என்கிறார் மு.க.ஸ்டாலின். அவர் கண்ணை மூடிக் கொண்டால் நாங்கள் என்ன செய்வது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Next Story