தமிழ்நாட்டு மக்களை அ.தி.மு.க., பா.ஜ.க. கொச்சைப்படுத்துகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்
ஈரோடு மண்ணுக்கு ஏராளமான பெருமைகள் உண்டு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஈரோடு வேட்பாளர் பிரகாஷ், நாமக்கல் வேட்பாளர் மாதேஸ்வரன், கரூர் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஈரோடு மண்ணுக்கு ஏராளமான பெருமைகள் உண்டு. இது பரப்புரை கூட்டமா அல்லது மாநில மாநாடா என்ற கேள்வி எழும் அளவுக்கு திரண்டு வந்திருக்கிறீர்கள். நாடு காக்கும் ஜனநாயக போர்க்களத்திற்கு அழைப்பு விடுக்க வந்துள்ளேன். இங்கு வரமுடியாவிட்டாலும், தன்னுடைய பணிகள் மூலம் மூலம் நம் உள்ளங்களில் இடம்பெற்றுள்ளார் செந்தில் பாலாஜி.
தமிழ்நாட்டில் உள்ள எல்லோருக்கும் ஏதோ ஒரு திட்டத்தில் பயன் கிடைக்கும் வகையில் ஆட்சியை நடத்தி வருகிறோம்.மக்கள் பயன்பெறும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்தால் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மகளிருக்காக ஏராளமான திட்டங்கள் செயலபடுத்தப்பட்டு வருகிறது.
மக்களுக்கான அரசாக திமுக ஆட்சி நடந்து வருகிறது. குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு, பெண்களுக்கு பணமும் கொடுக்கிறீர்கள் என தாய்மார்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். புதிய தொழிற்சாலைகள் அமைக்க ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முன்னேற்றப்பாதையில் செல்ல ஒவ்வொரு திட்டத்தையும் வடிவமைத்து செயல்படுத்துகிறோம். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் அரசை குறைகூறுகின்றனர். அரசை குறை கூறுவதாக நினைத்து, திட்டங்களால் பயன்பெரும் மக்களை கொச்சைப்படுத்துகிறார்கள். தாங்கள் நிறைவேற்றியதை கூறாமல்; அவதூறு குதிரையில், அ.தி.மு.க., பா.ஜ.க. பயணம் செய்கின்றனர். நல்ல விமர்சனம் வைத்தால் மாற்றலாம். ஆனால் வேண்டுமென்றே அவதூறுகளை பரப்புகின்றனர்.
தமிழ்நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் திட்டங்களை எதிர்க்கின்றனர். தேர்தல் அறிக்கையில் சொல்வதை செய்யும் கட்சி தி.மு.க. சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து இருண்ட கால ஆட்சியை கொடுத்தது அ.தி.மு.க. சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் இது கலைஞரின் பாணி. சொல்லாததை செய்வோம், சொல்லாமலும் செய்வோம் இது ஸ்டாலின் பாணி. கெஜ்ரிவால் மீதான அடக்குமுறையால் இந்தியா கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அடக்குமுறை எப்போதும் வெல்லாது' என்பதை இந்த தேர்தல் மூலம் மக்கள் பா.ஜ.க.விற்கு உணர்த்துவார்கள். வரும் ஜூன் 4-ம் தேதி இந்தியாவின் இரண்டாவது விடுதலை நாளாக வரலாற்றில் பதியட்டும்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இலவசமாக செல்போன் தருவதாக சொன்னார்கள், செய்தார்களா?. பா.ஜ.க. அரசு கருப்பு பணத்தை மீட்கவில்லை, ரூ.15 லட்சம் தரவில்லை. கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றாத பிரதமர் மோடி, ஊருக்கு உபதேசம் செய்யலமா?. பிரதமர் மோடி மொத்த அதிகாரத்தையும் தன்னுடைய பாக்கெட்டில் வைக்க நினைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.