பிரதமர் மோடியின் சென்னை வருகை மிக பெரிய தாக்கம் ஏற்படுத்தும்: அண்ணாமலை பேட்டி


பிரதமர் மோடியின் சென்னை வருகை மிக பெரிய தாக்கம் ஏற்படுத்தும்:  அண்ணாமலை பேட்டி
x

பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்று பா.ஜ.க.வின் தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி, 7-வது முறையாக தமிழகம் வந்துள்ளார். இதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தியாகராய நகர் பனகல் பூங்கா பகுதிக்கு சென்றார். பின்னர், பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார். கையில் தாமரை சின்னம் ஏந்தி, வாகன பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, கட்சி தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2 கிலோ மீட்டர் வரையிலான இந்த பேரணியின்போது, பா.ஜ.க. வேட்பாளர்கள் பால்கனகராஜ் (வடசென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), பொன்.பாலகணபதி (திருவள்ளூர்), பா.ம.க வேட்பாளர்கள் கே.பாலு (அரக்கோணம்), ஜோதி வெங்கடேசன் (காஞ்சீபுரம்), த.மா.கா. வேட்பாளர் வி.என்.வேணுகோபால் (ஸ்ரீபெரும்புதூர்) ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாகன பேரணியில் பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. வேட்பாளர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும், பிரதமரின் வாகன பேரணி நிகழ்ச்சியையொட்டி அந்த பகுதி முழுவதும் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இதன்பின்னர், பிரதமர் மோடியின் சென்னை வருகை பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது, பிரதமர் மோடி சென்னைக்கு வரும்போது, சென்னை மக்கள் தங்களுடைய சொந்த மக்களை போல் பிரதமரை வரவேற்கிறார்கள்.

சென்னை மக்கள் பிரதமர் மோடியை திறந்த கரங்களுடன் வரவேற்றனர். இன்றைய வாகன பேரணியானது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதன் வழியாக தமிழகத்தின் மனநிலை தெளிவாக தெரிகிறது. மக்கள் உண்மையில் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இது ஏப்ரல் 19-ந்தேதி ஒரு பெரிய அளவில் எதிரொலிக்க இருக்கிறது என்று பேசியுள்ளார்.

இதேபோன்று, பா.ஜ.க.வின் தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, பிரதமர் மோடியின் வருகை நிச்சயம் எங்களுக்கு உதவும். அவர் 3-வது முறையாக பிரதமராக வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அவர் எப்போதெல்லாம் வருகிறாரோ, தி.மு.க.வின் ரகசியம் வெளிப்படுகிறது. தமிழகத்தில் தாமரை மலரும் என்று கூறியுள்ளார்.


Next Story