ராஜஸ்தானில் வினோதம்; சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் பிரசாரம்


ராஜஸ்தானில் வினோதம்; சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் பிரசாரம்
x

காங்கிரசின் கூட்டணிக்கான ஆதரவு பற்றிய விவரங்கள் எதுவும் தனக்கு தெரியாது என்றும், தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்றும் காங்கிரஸ் வேட்பாளரான தமோர் கூறியுள்ளார்.

பன்ஸ்வாரா,

ராஜஸ்தானில் பன்ஸ்வாரா-துங்கர்பூர் மக்களவை தொகுதியானது வினோத முறையில் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இந்த தொகுதியில் தன்னுடைய சொந்த கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சி மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.

இதற்கான பின்னணி என்னவெனில், பழங்குடியினத்தவர் அதிகம் வசிக்க கூடிய இந்த தொகுதிக்கு முதலில், காங்கிரஸ் கட்சியானது அரவிந்த் தமோர் என்பவரை வேட்பாளராக அறிவித்தது.

எனினும், பாரத் ஆதிவாசி கட்சியுடன் (பி.ஏ.பி.) கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி, பின்னர் அக்கட்சியை சேர்ந்த ராஜ்குமார் ரோவத் என்பரை ஆதரிப்பது என முடிவானது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதிக்கு முன் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அக்கட்சிக்கான ஆதரவை காங்கிரஸ் அறிவித்ததும், தமோர் வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என கூறப்பட்டது. ஆனால், அவரோ வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான நேரம் முடிவடைந்தும் அந்த பகுதிக்கே வரவில்லை.

அதன்பின் ஊடகத்தின் முன் தோன்றி பேட்டியளித்த அவர், காங்கிரசின் கூட்டணிக்கான ஆதரவு பற்றிய விவரங்கள் எதுவும் தனக்கு தெரியாது என்றும், தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்றும் கூறினார்.

இதனால், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ்-பி.ஏ.பி. கூட்டணி என இரு முனை போட்டியாக தேர்தல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மும்முனை போட்டியாக மாறியுள்ளது. காங்கிரசின் ஓட்டுகளை தமோர் பிரிக்க கூடும். இதனால், பா.ஜ.க.வின் மகேந்திரஜித் சிங் மாளவியாவுக்கு சாதகம் ஏற்பட கூடிய சூழல் உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் பிரிவு தலைமையோ, சொந்த கட்சி வேட்பாளர் தமோருக்கு பதிலாக, ரோவத்துக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கூறி வருகிறது. ஆனால் தமோரோ, பி.ஏ.பி. கட்சியுடனான கூட்டணிக்கு எதிரான காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் ஆதரவு தனக்கு உள்ளது என்று கூறுகிறார்.

எனினும், மாளவியா மற்றும் ரோவத் இடையேதான் போட்டி இருக்கும் என பொதுமக்களில் பலர் தெரிவித்து உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விசயம் என்னவெனில், காங்கிரஸ் கட்சியில் 2 முறை மந்திரியாக இடம் பெற்றிருந்த மாளவியா, தனக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கவில்லை என கூறி கட்சியில் இருந்து வெளியேறினார்.

எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் விலகினார். கடந்த பிப்ரவரியில், பா.ஜ.க.வில் இணைந்து விட்டார். இந்த தொகுதியில் கல்வி, வேலைவாய்ப்பு, சாலை வசதிகள் மற்றும் மின்சாரம் ஆகியவை முக்கிய விசயங்களாக உள்ளன.

இந்த பகுதியில் வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளன. இதனால், குஜராத்திற்கு சென்று பலர் வேலை செய்கின்றனர். பெண்களில் பலரும் பண்ணை நிலங்களிலும், கூலி தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முன்னிலைப்படுத்தி கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story