தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது


தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
x

தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் பல்வேறு மாநிலங்களில் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார், யார்? என்பது பற்றிய தொகுதிக்கு சிலர் அடங்கிய உத்தேச பட்டியலை மாநில காங்கிரஸ் கமிட்டி தயார் செய்தது. அதனை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று முன்தினம் டெல்லிக்கு எடுத்துச் சென்றார்.

இதனைத்தொடர்ந்து கட்சியின் அகில இந்திய அலுவலகத்தில் நேற்று மாலை, மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு பற்றிய பரிசீலனை மீண்டும் நடைபெற்றது. தமிழ்நாடு மட்டுமின்றி வேறு பல மாநிலங்களுக்கும் பரிசீலனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு, ஓரளவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என பொறுப்பாளர் அஜோய்குமார் கூறினார்.

பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வேட்பாளர் தேர்வு தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் இறுதி செய்து வேட்பாளர்களை அறிவிப்போம். மக்களை நம்பி இருக்கும் அரசியல் இயக்கங்கள் வேறு. எந்திரங்களை நம்பி இருக்கும் அரசியல் இயக்கங்கள் வேறு. நாங்கள் மக்களை நம்பி நிற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story