தேர்தல் விதி மீறல்? - கட்சி சின்னம் பொறித்த துண்டுடன் மதவழிபாட்டுத்தலத்திற்கு சென்ற பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன்


தேர்தல் விதி மீறல்? - கட்சி சின்னம் பொறித்த துண்டுடன் மதவழிபாட்டுத்தலத்திற்கு சென்ற பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன்
x
தினத்தந்தி 24 March 2024 11:35 AM GMT (Updated: 24 March 2024 3:18 PM GMT)

மத வழிபாட்டுத்தலங்களை எந்த வகையிலும் வாக்கு சேகரிப்பிற்கு பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திருப்பூர்,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில், நீலகிரி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக மத்திய மந்திரி எல். முருகன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எல்.முருகன் இன்று திருப்பூர் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் மதவழிபாட்டு தலத்திற்கு வழிபாடு நடத்த சென்றார். அப்போது, பா.ஜ.க. சின்னமான தாமரை சின்னம் பொறித்த துண்டு அணிந்து வழிபாட்டு தலத்திற்கு சென்றார். மேலும் மதவழிபாட்டு தலத்தில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதவழிபாட்டு தலங்களை எந்த வகையிலும் வாக்கு சேகரிப்பிற்கு பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில் பா.ஜ.க. சின்னம் பொறித்த துண்டை எல்.முருகன் அணிந்து சென்றது தேர்தல் விதி மீறல் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக எல்.முருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story