சாம்பியன்ஸ் டிராபி: ஐ.சி.சி. ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன..?
சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணையை இறுதி செய்வது ஐ.சி.சி.-ன் நிர்வாக கமிட்டி இயக்குனர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
துபாய்,
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லீக் மற்றும் இரண்டு அரையிறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டது.
ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணி இந்த முறையும் அங்கு செல்ல மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ஆசிய கோப்பை போட்டி போன்று தங்களுக்குரிய ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவது தாமதமாகியுள்ளது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் போட்டி அட்டவணையை இறுதி செய்வது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாக கமிட்டி இயக்குனர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. காணொலி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் அதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை மட்டும் வேறு நாட்டில் நடத்தும் யோசனையை பாகிஸ்தான் மீண்டும் நிராகரித்தது. பாகிஸ்தான் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் கூட்டம் மறுநாளுக்கு (அதாவது இன்று) தள்ளி வைக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட ஐ.சி.சி., நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''சிறிது நேரம் நடந்த ஆலோசனை கூட்டம், ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும் கூட்டம் நடக்க உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரை திட்டமிட்டபடி நடத்துவது குறித்து அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து நல்ல முடிவு எடுப்போம். அடுத்த சில நாட்கள் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது'' என்று கூறினார்.
இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்காது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீண்டும் தெரிவித்து இருக்கிறது.