பெங்களூருவில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகை-பணம் கொள்ளை - கொலையாளிக்கு போலீஸ் வலைவீச்சு


பெங்களூருவில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகை-பணம் கொள்ளை - கொலையாளிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Feb 2019 2:00 AM IST (Updated: 7 Feb 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகை-பணம் கொள்ளையடித்த கொலையாளியை போலீசார் தேடிவருகிறார்கள்.

பெங்களூரு, 

பெங்களூரு கே.எஸ்.கார்டனில் அமைந்து இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் வசித்து வருபவர் நவரங் லால். இவருடைய மனைவி சந்தோசி சுல்தானியா (வயது 70). இந்த தம்பதி தங்களின் மகனுடன் வசித்து வந்தனர். நவரங் லால் ஜே.சி.ரோட்டில் கம்ப்யூட்டர், செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் மதியம் நவரங் லால் தனது மகனுடன் கடைக்கு சென்றார். இதனால், சந்தோசி சுல்தானியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த வேளையில் சென்னையில் வசித்து வரும் சந்தோசி சுல்தானியாவின் மகள் அவருக்கு போன் செய்தார். ஆனால் போனை அவர் எடுக்கவில்லை. இதுகுறித்து நவரங் லாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது, சந்தோசி சுல்தானியா பிணமாக கிடந்தார். அவருடைய தலை ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருந்ததோடு, கழுத்து சேலையால் இறுக்கப்பட்டு இருந்தது. அத்துடன் வீட்டில் இருந்த தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவை மாயமாகி இருந்தன. சந்தோசி சுல்தானியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய சம்பங்கிராம்நகர் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் நகை-பணத்துக்காக சந்தோசி சுல்தானியாவை கொலை செய்த நபர் வேகமாக கதவை இழுத்தபோது அது உள்புறமாக பூட்டியது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சந்தோசி சுல்தானியாவின் குடும்பத்தினரை பற்றி நன்கு அறிந்தவர்கள் தான் கொலையை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து சம்பங்கிராம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடிவருகிறார்கள்.


Next Story