கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கோரி மனு மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்
இந்தியா முழுவதும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து மத்திய அரசும், டெல்லி அரசும் பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள்
டெல்லி ஐகோர்ட்டில் வக்கீல் சித்தார் சீம், ஜாய்ஸ் மூலம் இரு மாற்றுத்திறனாளிகள் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் மத்திய அரசு பல்வேறு பிரிவினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறது. ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு என சிறப்பு பிரிவை உருவாக்கி அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது. இது அரசியலமைப்பு சட்டம் வழங்கிய சமத்துவ உரிமைக்கு எதிரானதாக இருக்கிறது.
எளிதில் தொற்று ஏற்படும்மத்திய அரசும், டெல்லி அரசும், தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்து வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளில் மாற்றுத்திறனாளிகள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. மற்றவர்களின் உதவியோடு செயல்படும் மாற்றுத்திறனாளிகளில் சில பிரிவினர், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எளிதில் ஆளாகி விடுவார்கள்.
குறிப்பாக சமூக விலகலை கடைப்பிடிப்பது, சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பது ஆகியவை மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை சவாலானது. குடும்பத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கவனித்துக் கொள்பவர்கள் மூலமும் எளிதில் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.
பதில் அளிக்க உத்தரவுஇதுபோன்ற சூழலில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து கொரோனா தொற்றிலிருந்தும், உயிரிழப்பிலிருந்தும் காக்க, அவர்களுக்குச் சிறப்பு பிரிவை உருவாக்கி தடுப்பூசி செலுத்த உத்தரவிட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள், அவர்களை கவனித்து கொள்வோருக்கு வயது வேறுபாட்டை பார்க்காமல் இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.