அதிகரிக்கும் கொரோனா.. அச்சுறுத்தும் ஒமைக்ரான்... எந்தெந்த மாநிலத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை?


அதிகரிக்கும் கொரோனா.. அச்சுறுத்தும் ஒமைக்ரான்... எந்தெந்த மாநிலத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை?
x
தினத்தந்தி 2 Jan 2022 4:11 PM GMT (Updated: 2 Jan 2022 4:11 PM GMT)

தமிழகம் உள்பட டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், மராட்டியம், மேற்கு வங்காளம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் தாக்கம் காரணமாக கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. 

இதையடுத்து உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளா,  போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

தமிழகம் உள்பட டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், மராட்டியம், மேற்கு வங்காளம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எந்தெந்த மாநிலத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதை காணலாம்.

அரியானா மாநிலத்தில் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன. இம்மாதம் 12ந்தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது.

டெல்லியில் இம்மாதம் 15ந்தேதி வரை 5ம் வகுப்பு வரையிலான மானவர்களுக்கு குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு பெருகி வரும் ஒமைக்ரான் பாதிப்பினை தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் மறு அறிவிப்பு வரும் வரை நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

எனினும், 9 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு செயல்முறை வகுப்புகள் மற்றும் தேர்வுகள் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும்.

உத்தரபிரதேசத்தில் நொய்டா, கிரேட்டர் நொய்டா, ஹாபூர் மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் டிசம்பர் 31 முதல் ஜனவரி 14 வரை 15 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.

மராட்டிய மாநிலத்தில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமானால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வட் தெரிவித்தார்.

கொரோனா பரவல் அதிகரிப்பால் மேற்கு வங்காளத்திலும் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேற்கு வங்காளத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன.

ஒடிசா மாநிலத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறைகளுக்கு பின் மீண்டும் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், கடந்த இரு தினங்களாக ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 10 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்பட தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

Next Story