ம.பி., ராஜஸ்தான், சத்தீஷ்காரில் பா.ஜனதா அமோக வெற்றி: தெலுங்கானாவை கைப்பற்றிய காங்கிரஸ்..!!


ம.பி., ராஜஸ்தான், சத்தீஷ்காரில் பா.ஜனதா அமோக வெற்றி: தெலுங்கானாவை கைப்பற்றிய காங்கிரஸ்..!!
x

கோப்புப்படம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய அரையிறுதியாக பார்க்கப்பட்ட இந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதாவின் கை ஓங்கியிருக்கிறது.

புதுடெல்லி,

5 மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த அக்டோபர் 9-ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய இந்த 5 மாநிலங்களிலும் உடனடியாக தேர்தல் ஜுரம் தொற்றிக்கொண்டது.

இதில் மிசோரமை தவிர மீதமுள்ள 4 மாநிலங்களும் நாட்டின் எதிர்கால அரசியலை நிர்ணயிப்பதில் முக்கிய இடம் பிடிப்பதால் இவற்றை கைப்பற்றுவதில் நாட்டின் பிரதான கட்சிகளான பா.ஜனதாவும், காங்கிரசும் அதீத ஆர்வம் காட்டின.

அனல் பறந்த பிரசாரத்தை தொடர்ந்து 5 மாநிலங்களிலும் கடந்த மாதம் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் கடைசியாக தெலுங்கானாவில் கடந்த 30-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் நடைபெற்ற இந்த 5 மாநிலங்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் எனவும், எனினும் குறைந்த இடங்கள் வித்தியாசத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆரூடம் தெரிவித்தன.

அதேநேரம் சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் எனவும், தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதியிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறிக்கும் எனவும் இந்த கருத்துக்கணிப்புகள் கூறின. மிசோரமில் சோரம் மக்களின் கட்சியிடம் ஆளும் மிசோரம் மக்களின் முன்னணி ஆட்சியை இழக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதனால் 5 மாநில தேர்தல் நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான சூழலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா 164 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அங்கு காங்கிரஸ் 65 தொகுதிகளை வென்றுள்ளது. பாரதிய ஆதிவாசி கட்சி (பி.ஏ.பி.) ஒரு இடத்தை பெற்றது.

காங்கிரசிடம் இருந்த ராஜஸ்தானில் 200 தொகுதிகள் உள்ள நிலையில், 199 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. ஒரு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கு வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடந்த 199 இடங்களில் 115 தொகுதிகளை வென்று பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 69 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பாரதிய ஆதிவாசி கட்சி 3, பகுஜன் சமாஜ் 2, ராஷ்டிரீய லோக்தளம் (ஆர்.எல்.டி.) 1, ராஷ்டிரீய லோக்தந்திரிக் கட்சி (ஆர்.எல்.டி.பி.) 1 மற்றும் சுயேச்சைகள் 8 இடங்களை பிடித்துள்ளன.

காங்கிரசிடம் இருந்த மற்றொரு மாநிலமான சத்தீஷ்காரில் மொத்தமுள்ள 90 இடங்களில் 54 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா அபார சாதனை படைத்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 35 இடங்களுடன் சுருங்கிப்போனது. கோண்டியானா கந்தந்திரா கட்சி (ஜி.ஜி.பி.) ஓரிடத்தை பெற்று இருக்கிறது.

இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியது போல தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியை ஆட்சியை பிடித்து உள்ளது.

அங்கு மொத்தமுள்ள 119 இடங்களில் அந்த கட்சி 64 இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்று உள்ளது. ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி 39 இடங்களை பிடித்தது. மேலும் பா.ஜனதா 8, மஜ்லிஸ் கட்சி (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) 7, இந்திய கம்யூனிஸ்டு 1 போன்ற கட்சிகளும் சில இடங்களை கைப்பற்றி உள்ளன. கடந்த முறை ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜனதா இம்முறை 8 இடங்களில் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் மிசோரமில் ஞாயிற்றுக்கிழமையில் வாக்குகள் எண்ணுவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அங்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய அரையிறுதியாக பார்க்கப்பட்ட இந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதாவின் கை ஓங்கியிருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு 6 மாதங்கள் கூட இல்லாத நிலையில், இந்த மாநிலங்களில் பெற்றிருக்கும் வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என பா.ஜனதாவினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story