அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்
மத்திய இணை மந்திரி எல்.முருகன் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
டெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, அரசியல் கட்சியினர் கட்சி மாறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரிகள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். அதேபோல், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
பா.ஜ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலரின் விவரம்:-
ஆர்.துரைசாமி
கு.வடிவேல்
கந்தசாமி
கோமதி சீனிவாசன்
ஆர்.சின்னசாமி
எம்.வி.ரத்தினம்
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.