தமிழகம், கேரளாவில் பா.ஜனதா கூட்டணிக்கு வெற்றி கிடைக்குமா...? புதிய கருத்து கணிப்பில் தகவல்


தமிழகம், கேரளாவில் பா.ஜனதா கூட்டணிக்கு வெற்றி கிடைக்குமா...? புதிய கருத்து கணிப்பில் தகவல்
x
தினத்தந்தி 14 March 2024 3:56 PM IST (Updated: 14 March 2024 5:07 PM IST)
t-max-icont-min-icon

இதுவரை வந்துள்ள பெரும்பாலான கருத்துகணிப்புகள், மீண்டும் பிரதமராக மோடியே தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டன.

அதே நேரம் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இதுவரை வந்துள்ள பெரும்பாலான கருத்து கணிப்புகள், மீண்டும் பிரதமராக மோடியே தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளன.

தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க. கூட்டணிதான் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

தற்போது நியூஸ்18 நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 30 தொகுதிகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது.

பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 5 தொகுதிகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் அந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 14 தொகுதிகளும், ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணிக்கு 4 இடங்களும் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு மூலமாக தெரிகிறது.

கேரளாவில் முதல் முறையாக பா.ஜனதா கட்சி 2 தொகுதிகளை கைப்பற்றும் என்று அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. அந்த கட்சிக்கு 18 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் இருந்து தெரிகிறது.

பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்திலும், மற்றொரு மத்திய மந்திரி முரளீதரன் ஆற்றிங்கல் தொகுதியிலும், நடிகர் சுரேஷ்கோபி திருச்சூரிலும் போட்டியிடுகிறார்கள்

பத்தனம் திட்டா தொகுதியில் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

21 மாநிலங்களில் உள்ள 518 தொகுதிகளில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேரிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டதாக நியூஸ் 18 நிறுவனம் தெரிவித்து உள்ளது.


Next Story