மராட்டியத்தில் ராகுல் காந்தி யாத்திரை நவம்பர் 7-ந் தேதி தொடக்கம்; சரத்பவார், உத்தவ் தாக்கரே பங்கேற்கிறார்கள்


மராட்டியத்தில் ராகுல் காந்தி யாத்திரை நவம்பர் 7-ந் தேதி தொடக்கம்; சரத்பவார், உத்தவ் தாக்கரே பங்கேற்கிறார்கள்
x

மராட்டியத்தில் ராகுல் காந்தி யாத்திரை அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது.

பாதயாத்திரை

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்தியா ஒற்றுமை (பாரத் ஜோடா) பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கினார். அவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நாடு முழுவதும் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பாதயாத்திரையாக செல்ல உள்ளார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் பாத யாத்திரையை முடித்து உள்ள ராகுல் காந்தி தற்போது ஆந்திராவில் உள்ளார். அவர் தெலுங்கானாவில் பாத யாத்திரையை முடித்துவிட்டு மராட்டியம் வர உள்ளார்.

7-ந் தேதி தொடக்கம்

இதில் மராட்டியத்தில் பாரத் ஜோடா யாத்திரை அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை 14 நாட்கள் நடைபெற உள்ளது. மராட்டியத்தில் நடைபெறும் ராகுல் காந்தி யாத்திரையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ராகுல் காந்தி யாத்திரை மராட்டியத்தில் நான்தெட், ஹிங்கோலி, வாஷிம், அகோலா, புல்தானா ஆகிய 5 மாவட்டங்களில் நடக்கிறது.

2 பொதுக்கூட்டங்கள்

இதுதொடர்பாக சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 2 தலைவர்களையும் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் ராகுல்காந்தி யாத்திரை நான்தெட்டில் உள்ள தெக்லுர் பகுதியில் அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்குகிறது. அந்த மாவட்டத்தில் 4 நாட்கள் அவர் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

மேலும் நான்தெட் சிட்டி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள். 11-ந் தேதி பாத யாத்திரை ஹிங்கோலி மாவட்டத்துக்கு செல்கிறது. அதன்பிறகு வாஷிம், அகோலா புல்தானா மாவட்டத்தில் பாதயாத்திரை நடக்கிறது.

தேதி முடிவாகவில்லை

புல்தானாவில் நடைபெற உள்ள 2-வது பொதுக்கூட்டத்தில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இதேபோல நான்தெட்டில் 9-ந் தேதி சரத்பவாா், ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்து கொள்வார். உத்தவ் தாக்கரேவும் கலந்து கொள்வதாக உறுதி அளித்து உள்ளார்.

ஆனால் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நவம்பர் 20-ந் தேதி ராகுல் காந்தி மராட்டியத்தில் பாதயாத்திரையை முடித்து மத்திய பிரதேசம் செல்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story