சீமானை நகைச்சுவை நடிகராகவே பார்க்கிறேன் - கே.எஸ்.அழகிரி பேட்டி


சீமானை நகைச்சுவை நடிகராகவே பார்க்கிறேன் - கே.எஸ்.அழகிரி பேட்டி
x

தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகச்சொன்ன சீமானை நகைச்சுவை நடிகராகவே பார்க்கிறேன் என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.

ஏமாற்று வேலை

மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்து உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்து உள்ளது. 'யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே' என்பது போல தேர்தல் வருவதையொட்டி, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது. அதனை பிரதமர் மோடி ரக்சாபந்தனுக்கு பரிசாக அளித்து இருப்பதாக கூறுகிறார்கள். இதை நான் மக்கள் கைகளில் போட்ட விலங்கை தளர்த்தி இருப்பதாகவே பார்க்கிறேன்.

மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் விலை 108 டாலராக இருந்த போது, பெட்ரோல் ரூ.70, டீசல் ரூ.60, சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.400-க்கு வழங்கினார்.

தற்போதைய கச்சா எண்ணெய் விலையை பார்க்கும் போது சமையல் கியாஸ் சிலிண்டரை ரூ.200-க்கு தான் வழங்க வேண்டும். ஆனால், சமையல் கியாஸ் சிலிண்டரை ரூ.1,200-க்கு விற்றுவிட்டு, இப்போது ரூ.200 குறைத்து இருப்பது என்பதைவிட ஏமாற்று வேலை வேறு இருக்க முடியாது.

ராகுல்காந்தி விளக்கம்

நீட் தேர்வுக்கான வரைவு திட்டம் வெளியிட்ட போதே ராகுல்காந்தி அதற்கு விளக்கம் அளித்து இருந்தார். விரும்புகிற மாநில அரசுகள் நடத்திக் கொள்ளலாம். விரும்பாத மாநிலங்கள் நீட் தேர்வை விட்டு விடலாம் என்று விளக்கம் அளித்து இருந்தார்.

தமிழகத்தில் ஏன் நீட் தேர்வு விலக்கு கேட்கிறோம் என்றால், இங்குள்ள 90 சதவீதம் அரசு பள்ளிகள் மாநில பாடத்திட்டத்தை கொண்டதாகும் என்பதால்தான். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதுதான் என்று கூறியது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் ரத்து செய்துவிட முடியும் என்ற அரசியல் சாசன சட்டத்தின் மீதான நம்பிக்கையில்தான்.

நகைச்சுவை நடிகராகவே பார்க்கிறேன்

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றினால் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளேன் என்று சீமான் கூறியிருப்பதற்கு ஒரே வரியில் பதில் சொல்ல விரும்புகிறேன்.

அதாவது, சீமானை ஒரு காமெடியனாகவே (நகைச்சுவை நடிகராகவே) பார்க்கிறேன். ஒரு படத்தில் வடிவேலு, 'நானும் ரவுடிதான்; நானும் ரவுடிதான்' என்று கூறுவதை போலத்தான் சீமானின் கருத்தும் உள்ளது. மற்றபடி அவரைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.


Next Story