பாஜக வேட்பாளரை நிறுத்தினால் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்வோம் - ஓ.பன்னீர் செல்வம்


பாஜக வேட்பாளரை நிறுத்தினால் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்வோம் - ஓ.பன்னீர் செல்வம்
x

இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் எங்கள் வேட்பாளரை திரும்பப்பெற்றுக்கொள்ளோம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட பலரும் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனிடையே, இடைத்தேர்தல் நெருக்கி வருவதால் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை இன்று அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளாரக தென்னரசு போட்டியிடுவார் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் செந்தில் முருகன் போட்டியிருவார் என்றும் ஒருவேளை பாஜக வேட்பாளரை அறிவித்தால் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்வோம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வேட்பாளராக செந்தில் முருகன் நிறுத்தப்பட்டுள்ளார். இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் நாங்கள் ஆதரவு தருவோம் என்று ஏற்கனவே கூறினோம். ஏற்கனவே நான் எங்கள் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஒன்று சேர்ந்து நேரடியாக பாஜக அலுவலகம் சென்று பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகளும் நிறைந்திருந்தார்கள்.

அவர்களிடம் எங்களுடைய ஆதரவை கேட்டோம். பாஜக போட்டியிடும் என்று கூறினால் எங்கள் தார்மீக ஆதரவையும் தருவோம் என்ற வாக்குறுதியையும் அளித்துவந்துள்ளோம்.

இடைத்தேர்தலில் பாஜக தங்கள் வேட்பாளரை நிறுத்தும் என்ற உறுதியாக தகவல் எங்களுக்கு கிடைத்தவுடன் எங்கள் வேட்பாளரை திரும்பப்பெற்றுக்கொள்ளோம்' என்றார்.


Next Story