பா.ஜ.க. பற்றி யாரும் விமர்சிக்க கூடாது: கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட அதிமுக தலைமை


பா.ஜ.க. பற்றி யாரும் விமர்சிக்க கூடாது: கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட அதிமுக தலைமை
x
தினத்தந்தி 20 Sept 2023 12:40 PM IST (Updated: 20 Sept 2023 1:02 PM IST)
t-max-icont-min-icon

இப்போது எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை, தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்று ஜெயக்குமார் திட்டவட்டமாக அறிவித்தார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பற்றி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. தரப்பில் அண்ணாமலை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. தரப்பிலும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் கடந்த 17-ந்தேதி அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். இது அ.தி.மு.க.வினருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அண்ணாமலை பேசிய வீடியோ பதிவை முழுமையாக பார்த்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கடும் கோபம் அடைந்தார். இதையடுத்து அ.தி.மு.க. தரப்பில் இருந்து அண்ணாமலைக்கு அதிரடியாக பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 18-ந்தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் "பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எல்லை மீறி செல்கிறார். அவரிடம் அரசியல் தலைவருக்கான பக்குவம் இல்லை. அவர் தலைவராக இருக்கும்வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது. இப்போது எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்" என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இதற்கு பாஜக துணைத் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். அ.தி.மு.க. தலைமையை விமர்சித்தும், தங்களால் தனியாக நிற்கவும் முடியும் என்றும் ஆவேசமாக பதிவிட்டனர். இது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை மேலும் பிளவுப்படுத்தும் வகையில் இருந்தது.

அண்ணாமலை தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காததால் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பா.ஜ.க. மீது தொடர் தாக்குதலை நடத்தினார்கள். சமூக வலைத்தளங்கள் மூலம் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரசாரத்தை ஆரம்பித்தனர். இதை அறிந்த பாரதிய ஜனதா மேலிட தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அ.தி.மு.க.வுடன் ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வர பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி சமூக வலைதளங்களில் அ.தி.மு.க.வை விமர்சிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கூட்டணி தொடர்பாக இனி தமிழக பா.ஜ.க. தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அமைதியாகி விட்டனர். இதனால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சற்று இறங்கி வந்துள்ளனர். பாரதிய ஜனதாவுடன் இப்போதைக்கு மோதல் போக்கை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஒருமித்த முடிவை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தேவையற்ற கருத்துக்களை கூறி சர்ச்சையை அதிகரிக்க வேண்டாம் என்றும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக மட்டும் நாகரிகமாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் அதிமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவு ஒன்றை அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜக பற்றியோ, கூட்டணி பற்றியோ அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் விமர்சனம் செய்து பேசக்கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். பொதுவெளியில் பாஜக பற்றி பேசினால் குழப்பம் ஏற்படுத்தும் என்பதால் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவுரையை வழங்கியிருக்கிறார். இதனால் அதிமுக-பாஜக மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.


Next Story