கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்: காதலியின் 2 குழந்தைகள் கல்லால் அடித்துக்கொலை


கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்: காதலியின் 2 குழந்தைகள் கல்லால் அடித்துக்கொலை
x

கள்ளக்காதலை கைவிட்ட காதலியின் 2 குழந்தைகளை கல்லால் அடித்துக்கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஏர்கொல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 30). சிவில் என்ஜினீயர். இவரது மனைவி பிரியா (24). இவர்களுக்கு சஷ்வந்த் (6), தர்ஷன் (3) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

பாலகிருஷ்ணன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் முண்டாசு புறவடையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கி இருந்தார். இந்தநிலையில், பிரியாவுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் வெங்கடேஷ் (27) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்தநிலையில், திடீரென பிரியா வெங்கடேஷ் உடனான தொடர்பை துண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் பிரியாவை பழிவாங்கும் நோக்கத்துடன் வீட்டு அருகில் விளையாடி கொண்டிருந்த அவரது மகன்கள் இருவரையும் நேற்று முன்தினம் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். வெங்கடேசை அதியமான்கோட்டை போலீசார் கைது செய்த நிலையில், நேற்று அவர் போலீஸ் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு தப்பி சென்று அங்குள்ள மின் கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


Next Story