தொகுதி பங்கீடு விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு


தொகுதி பங்கீடு விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
x
தினத்தந்தி 8 March 2024 7:00 AM GMT (Updated: 8 March 2024 8:04 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லிக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ம.தி.மு.க. , விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலிலும் 10 தொகுதிகள் வேண்டுமென காங்கிரஸ் கேட்கிறது. ஆனால், 10 தொகுதிகளுக்கு கீழ்தான் ஒதுக்குவோம் என தி.மு.க. கூறுவதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தங்களுக்கு 2 தனித்தொகுதிகள், ஒரு பொதுத்தொகுதியும் ஒதுக்க வேண்டும், தாங்கள் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்றும் கூறுகிறது. இதற்கு தி.மு.க. மறுப்பு தெரிவிக்கவே விடுதலை சிறுத்தைகள் உடனான தொகுதி பங்கீட்டிலும் இழுபறி நீடித்து வருகிறது. மேலும், விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இன்று நேரில் சந்தித்தார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்-அமைச்சருடனான சந்திப்பிற்கு பின் அண்ணா அறிவாலயம் செல்லும் திருமாவளவன் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது தொகுதி பங்கீடு தொடர்பான உடன்பாடு கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story