2 ஆண்டுகள் சட்டப்போராட்டம்: அமெரிக்காவில் பெற்றோரை இழந்த குழந்தையை மீட்டு சென்னை அழைத்துவந்த சித்தி - நெகிழ்ச்சி சம்பவம்


2 ஆண்டுகள் சட்டப்போராட்டம்: அமெரிக்காவில் பெற்றோரை இழந்த குழந்தையை மீட்டு சென்னை அழைத்துவந்த சித்தி - நெகிழ்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 2 April 2024 6:31 AM GMT (Updated: 2 April 2024 7:19 AM GMT)

அமெரிக்காவில் பெற்றோரை இழந்த குழந்தையை மீட்டு சென்னை அழைத்துவந்த சித்தியை உறவினர்கள் கண்ணீருடன் வரவேற்றனர்.

சென்னை,

திருச்சியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. அவரது கணவர் பிரவீன் குமார். இவர் உசிலம்பட்டியை சேர்ந்தவர். கணவன்-மனைவி இருவரும் அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்த தம்பதிக்கு விஸ்ருத் என்ற குழந்தை உள்ளது. இதனிடையே, கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி மிசிசிப்பியில் உள்ள தங்கள் வீட்டில் பிரவீன்குமாரும் அவரது மனைவி தமிழ்ச்செல்வியும் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், தம்பதியின் குழந்தை விஸ்ருத் அனாதையானது. குழந்தையை அருகில் உள்ள வீட்டில் வசித்துவந்தவர் பராமரித்து வந்தார். மேலும், தற்கொலை செய்த இருவரது உடல்களையும் இந்தியா அனுப்புவதற்காக பொது அதிகார ஆவணம் பெற்றிருந்தார்.

அதேவேளை, குழந்தை விஸ்ருத்திற்கு யாரும் இல்லை என நினைத்து தமிழ்நாட்டில் உள்ள தமிழ்செல்வியின் உறவினர்கள் சம்மதம் இல்லாமல் அமெரிக்காவில் வசித்துவந்த பஞ்சாப் மாநில தம்பதிக்கு தத்து கொடுத்து விட்டார்.

ஆனால், குழந்தை விஸ்ருத்தின் தாய் வழி பாட்டியும், சித்தி அபிநயா முருகன் ஆகியோரும் அமெரிக்கா சென்று குழந்தையை மீட்டெடுத்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வர சட்ட போராட்டத்தை தொடங்கினர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசை தொடர்பு கொண்டு அயலகத் தமிழர் நல வாரியத்தின் உதவியை நாடினர்.

இதை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனே அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதியை அமெரிக்கா சென்று பிரச்சினைக்கு தீர்வு காண உத்தரவிட்டார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி அமெரிக்கா சென்று மிசிசிப்பி மாகாணத்தில் இந்திய தூதரக அதிகாரிகள், அந்த குழந்தையின் சித்தி, பாட்டி, தமிழ் சங்க உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள், அமெரிக்காவிற்கான அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் மிசிசிப்பி மாகாண கவர்னர் டேட் ரிவிஸ், அட்டர்னி ஜெனரல் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நல வாரியத்தின் சார்பாக குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்க கடிதம் அனுப்பப்பட்டது. பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து குழந்தை விஸ்ருத்தை அவருடைய சித்தி அபிநயா மற்றும் பாட்டியுடன் ஒப்படைக்க அமெரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, குழந்தை விஸ்ருத் அவரது சித்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், 2 ஆண்டுகள் சட்டப்போராட்டத்திற்குப்பின் மீட்கப்பட்ட குழந்தை விஸ்ருத் உடன் பாட்டி, சித்தி அபிநயா நேற்று சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையம் வந்தடைந்த 3 பேரையும் தமிழ்நாடு அயலக நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். சித்தி, பாட்டி மீட்டு வந்த குழந்தை விஸ்ருத்தை கண்ட உறவினர்கள் கண்ணீருடன் வரவேற்றனர்.

அப்போது தமிழ்நாடு அயலக நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி கூறும்போது, "முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் குழந்தையை மீட்டு சென்னை வந்து உள்ளனர். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள குழந்தை இந்தியாவில் தங்குவதா? இல்லை அமெரிக்காவில் தங்குவதா? என்பதை 18 வயது முடிந்த பின் முடிவு செய்து கொள்ளலாம்" என்றார்.

அமெரிக்காவில் 2 ஆண்டுகள் தங்கி குழந்தையை மீட்டு கொண்டு வந்த சித்தி அபிநயா கூறும்போது, "அமெரிக்காவில் கோவையை சேர்ந்த தம்பதி எங்களை தங்க வைத்து பார்த்துக்கொண்டனர். 2 வருடங்கள் அங்குள்ள தமிழ் சங்கம், தன்னார்வலர்கள் எனக்கு முழு ஆதரவு அளித்து தேவையான உதவிகளை செய்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கார்த்திகேய சிவசேனாதிபதி ஆகியோருக்கும், உதவி செய்த அனைவருக்கும் நன்றி" என்றார்.


Next Story