பாகிஸ்தான் குவாடர் துறைமுக அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


பாகிஸ்தான் குவாடர் துறைமுக அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 21 March 2024 10:16 AM GMT (Updated: 21 March 2024 12:19 PM GMT)

பலுசிஸ்தான் விடுதலை இயக்கம், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் செயல்படும் குவாடர் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தி உள்ளது.

கராச்சி,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவாடர் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. குவாடர் துறைமுக வளாகத்தில் பல அரசு மற்றும் துணை ராணுவ அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில், குவாடர் துறைமுகத்தில் உள்ள அதிகாரிகள் பணிபுரியும் ஆணைய வளாகத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். துறைமுகத்தில் துப்பாக்கி சூடு மற்றும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. உடனே அங்கிருந்த ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கி கொண்டனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ராணுவத்தினர் துறைமுகத்துக்கு விரைந்து சென்றனர். ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடந்தது. இந்த தாக்குதலில் துறைமுகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சூட்டில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் பொறுப்பேற்று உள்ளது. இந்த இயக்கம், பலுசிஸ்தானில் சீனாவின் முதலீடுகளை எதிர்த்து வருகிறது. வளங்கள் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தை சீனாவும், பாகிஸ்தானும் சுரண்டுவதாக குற்றம்சாட்டி வருகிறது. அந்த இயக்கத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் செயல்படும் குவாடர் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பலுசிஸ்தான் மாகாண முதல்-மந்திரி சர்ப்ராஸ் புக்டி கூறுகையில், குவாடர் துறைமுக ஆணைய வளாகத்தில் 8 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். அவர்கள் அனைவரும் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். வன்முறையை பயன்படுத்த விரும்பும் யாரும் அரசின் கருணையை பார்க்க மாட்டார்கள். பாகிஸ்தானுக்காக துணிச்சலுடன் போராடிய அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


Next Story