ஹவுதி மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை உயர்வு


ஹவுதி மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை உயர்வு
x

ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

வாஷிங்டன்,

இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினர் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன் எதிரொலியாக செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்.

உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் வழித்தடங்களுள் ஒன்றான செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, பல்வேறு கப்பல் நிறுவனங்கள் தங்கள் கப்பல்களின் வழித்தடத்தை மாற்றியுள்ளன. இந்த ஹவுதி இயக்கம் ஈரான் ஆதரவுடன் இயங்கி வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும் இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து இன்று தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏமன் நாட்டின் சதா, அல்ஹுதைதா, சத்தா, தாமர் ஆகிய நகரங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்காவும், இங்கிலாந்தும் அதிக விலை கொடுக்கும் என்று ஹவுதி அமைப்பின் துணை வெளியுறவு மந்திரி ஹுசைன் அல்-எஸி எச்சரித்துள்ளார். இந்நிலையில், இந்த தாக்குதல்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 2.5 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல், பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 79.36 டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story