ஜபாலியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள்: எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா நாடுகள் கண்டனம்


ஜபாலியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள்: எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா நாடுகள் கண்டனம்
x
தினத்தந்தி 31 Oct 2023 9:16 PM GMT (Updated: 1 Nov 2023 7:12 AM GMT)

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 26-வது நாளை எட்டியுள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட 4 போர்களை விடவும் இந்த போர் அதிக உயிரிழப்புகளையும், கடுமையான மனிதாபிமான நெருக்கடியையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே காசாவில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அதை திட்டவட்டமாக நிராகரித்த இஸ்ரேல் ஹமாசை முழுவதுமாக ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என சபதம் செய்து போரை தொடர்ந்து வருகிறது. முதலில் வான் மற்றும் கடல்வழியாக காசா மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம், கடந்த சில தினங்களாக காசாவுக்குள் தரைவழியாக சென்று தாக்குதல்களை விரிவுபடுத்தி வருகிறது.

வடக்கு காசாவில் தரைவழி தாக்குதல்கள் தீவிரமாக நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு இஸ்ரேல் ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினர் நேருக்கு நேர் எதிர்கொண்டு வருவதாகவும், வீதிகளில் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இஸ்ரேல் ராணுவத்தின் இடைவிடாத குண்டு மழையில் அங்குள்ள குடியிருப்பு கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை தரைமட்டமாகி கிடக்கும் நிலையில், தரைவழி தாக்குதல் அங்கு மேலும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தசூழலில் காசாவில் உள்ள 13 ஆஸ்பத்திரிகளில் இருந்தும் நோயாளிகளை வெளியேற்றும்படி இஸ்ரேல் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் வான்தாக்குதலில் ஆஸ்பத்திரிகள் இலக்காகும் அபாயம் நிலவுகிறது.

இதனிடையே காசா மீது வான், கடல், தரை என 3 வழிகளிலும் இஸ்ரேல் தாக்குதல்களை விரிவுபடுத்தி வருவதால் அங்கு உயிரிழப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

அதன்படி 3 வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த போரில் காசாவில் மட்டும் இதுவரை 8,500-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயமாகும். மேலும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் 2 ஆயிரம் பேர் கட்டிட இடிபாடுகளில் புதையுண்டு மாயமாகி உள்ளனர்.

அதேபோல் இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,400 பேர் பலியானதும், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இது தவிர இஸ்ரேலை சேர்ந்த 200-க்கும் அதிகமானோர் காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜபாலியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதன்படி வான்வழித் தாக்குதல்களை "மனிதாபிமானமற்றது" என்றும், "சர்வதேச சட்டத்தை அப்பட்டமான மீறல்" என்றும் எகிப்து கூறியுள்ளது. மேலும் மருத்துவமனைகளிலும் அதைச் சுற்றியும் பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், அவர்கள் அடைக்கலம் தேடும் இடங்களில்" ஏற்படும் விளைவுகள் குறித்தும் எகிப்து கவலை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் தலையிடவும், காசா வாசிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும் எகிப்து வலியுறுத்தியுள்ளது.

ஹமாசின் மத்திய ஜபாலியா பட்டாலியனின் தளபதி இப்ராஹிம் பியாரி, காசா பகுதியில் உள்ள ஜபல்யா அகதிகள் முகாமில் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறியதை தொடர்ந்து மூன்று நாடுகளின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story