டாக்டர், நர்சு, நோயாளி வேடத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் சிறப்பு படையினர் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 3 பேர் சுட்டுக்கொலை


டாக்டர், நர்சு, நோயாளி வேடத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் சிறப்பு படையினர் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 3 பேர் சுட்டுக்கொலை
x

டாக்டர், நர்சு, நோயாளி மாறுவேடத்தில் இஸ்ரேல் சிறப்பு படையினர் மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் 3 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. காசா முனையில் போர் நடந்துவரும் நிலையில் மேற்குகரையிலும் இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள இபென் சினா மருத்துவமனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதாக இஸ்ரேல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, டாக்டர், நர்சு, நோயாளி என வேடமணிந்த இஸ்ரேல் சிறப்பு படையினர் அதிரடியாக மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஹமாஸ் ஆயுதக்குழுவின் தளபதி முகமது ஜலாம்நிஹ், பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவை சேர்ந்த பசில் அய்மென் அல் குவாசி, முகமது ஆகிய 3 பேரையும் மாறுவேடத்தில் வந்த இஸ்ரேல் சிறப்புப்படையினர் சுட்டுவீழ்த்தினர். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்ரேல் படையின் அதிரடி நடவடிக்கை தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story