நெல்லையில் பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.;
திருநெல்வேலி மாநகரம், நெல்லை சந்திப்பு, சி.என்.கிராமம், மேலத்தெருவில் வசிக்கும் இசக்கிபாண்டி என்பவரை திருநெல்வேலி, பாளையங்கோட்டை, பாகிட்மாநகரம், நடுவக்குறிச்சி, சர்க்கரை விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ஊய்காட்டான் மகன் இசக்கி(எ) இசக்கிபாண்டி (வயது 39) மற்றும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, திம்மராஜபுரம் மேலூர், பசும்பொன்நகரைச் சேர்ந்த பேச்சி மகன் மகாராஜன்(38) ஆகியோர் திருநெல்வேலி சந்திப்பு, தனியார் திரையரங்கு அருகே 2.5.2025ஆம் தேதி பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டியுள்ளனர்.
மேற்சொன்ன வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இசக்கி(எ) இசக்கிபாண்டி மற்றும் மகாராஜன் ஆகிய 2 பேர் திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) கீதா, போலீஸ் உதவி கமிஷனர், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு (பொறுப்பு) ஜங்ஷன் சரகம் கணேசன் மற்றும் திருநெல்வேலி சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி ஆகியோரின் பரிந்துரையின்பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி நேற்று (14.5.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.