தூத்துக்குடி: வீடுகள், கோவிலுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி- காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ. மழை பெய்தது

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகள், கோவில், ரெயில்நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.;

Update:2025-10-16 12:41 IST

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. நள்ளிரவிலும் மழை தொடர்ந்து பெய்தது.

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 6.30 மணி முதல் இன்று காலை 6.30 மணி வரை பெய்த மழை அளவு பின்வருமாறு:

அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ., திருச்செந்தூரில் 14.6 செ.மீ., சாத்தான்குளத்தில் 8.4 செ.மீ. அளவில் மழை பெய்தது.

மேலும் இதேபோல் ஸ்ரீவைகுண்டத்தில் 5.6 செ.மீ., குலசேகரன்பட்டினத்தில் 5.5 செ.மீ., ஓட்டப்பிடாரத்தில் 5.4 செ.மீ., தூத்துக்குடி மாநகரில் 4.2 செ.மீ., வேடநத்தத்தில் 4.5 செ.மீ., கழுகுமலை மற்றும் வைப்பார் பகுதிகளில் 3.2 செ.மீ., கோவில்பட்டியில் 3.1 செ.மீ., மணியாச்சியில் 3 செ.மீ., கீழஅரசடியில் 2.5 செ.மீ., கயத்தாறு 1.8 செ.மீ., கடம்பூர் மற்றும் சூரன்குடி பகுதிகளில் 1.7 செ.மீ., எட்டயபுரத்தில் 1.6 செ.மீ. மற்றும் விளாத்திகுளத்தில் 8 மி.மீ., காடல்குடி 7 மி.மீ. என்ற அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 87.08 செ.மீ. அளவில் மழை பெய்துள்ளது. அதாவது சராசரியாக 4.58 செ.மீ. அளவில் மழை பெய்துள்ளது.

தூத்துக்குடியில் இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக மாநகரின் தாழ்வான பகுதிகளான பழைய மாநகராட்சி பகுதி மற்றும் பேட்டரிக் சர்ச் பகுதி, காந்தி சிலை, மட்டக்கடை எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதி, தமிழ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. பெரைரா தெரு, சின்ன கடை தெரு மத்திய பாகம் காவல் நிலையம், ெரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.

சந்தை ரோட்டில் உள்ள எஸ்பிஜி கோவில் தெருவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த மின் சாதன பொருட்கள் அனைத்தும் சேதமாகின. இந்த தெருவில் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால். அங்கே தண்ணீர் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இந்த தெரு முழுவதும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இதேபோல தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் மழைநீர் புகுந்ததால் அங்கு வரக்கூடிய மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

தூத்துக்குடி மாநகராட்சியில் கழிவுநீர் கால்வாய் மேம்படுத்துவதில் அதிகாரிகள் சரிவர செயல்படாத காரணத்தால், ஒரு நாள் மழைக்கே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் ெதாடந்து கனமழை பெய்தது. திருச்செந்தூர் கோவில் வளாகத்திற்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். திருச்செந்தூர் பிரதான சாலையில் முத்தையாபுரம் முதல் முள்ளக்காடு வரை வடிகால் அமைக்கப்படாததால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக சென்னை, கோவை பெங்களூரு மற்றும் மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில இருந்து வரக்கூடிய பஸ்கள் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். 

Tags:    

மேலும் செய்திகள்