இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025

Update:2025-09-17 09:10 IST
Live Updates - Page 5
2025-09-17 05:04 GMT

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற தமிழக வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து


உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் சீனாவில் நடந்து வருகிறது. இதில் 1,000 மீ ஸ்பிரிண்ட்-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் (22) தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஆனந்த்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


2025-09-17 04:59 GMT

பிரதமர் மோடி பிறந்தநாள்: ராகுல் காந்தி, பினராயி விஜயன் வாழ்த்து


பிரதமர் மோடி தனது 75-வது பிறந்தநாள் இன்று (புதன்கிழமை) கொண்டாடுகிறார். பா.ஜனதாவை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் சக்தியாக புதிய உச்சத்துக்கு கொண்டு சென்ற தலைவரான மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட பா.ஜனதாவினர் முடிவு செய்துள்ளனர். இதையொட்டி பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


2025-09-17 04:57 GMT

உத்தரகாண்டில் வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு


உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் சாலைகள், வீடுகள் சேதம் அடைந்தன. டேராடூனில் நேற்று அதிகாலை ஒரு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு படை நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்தநிலையில் டேராடூன் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.


2025-09-17 04:55 GMT

காசாவில் மீண்டும் தரைவழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்


காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.


2025-09-17 04:51 GMT

இந்தியாவுக்கு சவால் அளிக்கும் அணியாக பாகிஸ்தான் இல்லை - கங்குலி


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில்,

'பாகிஸ்தான் அணி நமக்கு இணையான தரம் கொண்ட அணியாக இல்லை. நான் அவர்களின் கடந்த கால அணியை பார்த்து இருக்கிறேன். தற்போதைய பாகிஸ்தான் அணியின் தரம் குறைந்துள்ளது. நீண்ட காலமாக நட்சத்திர வீரர்களாக வலம் வந்த விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாமல் இந்திய அணி விளையாடுகிறது. கிரிக்கெட்டில் பாகிஸ்தான் மற்றும் இந்த ஆசிய கோப்பையில் பங்கேற்றுள்ள மற்ற அணிகளை விட இந்தியா வெகுதூரம் முன்னிலையில் இருக்கிறது

இவ்வாறு அவர் தெரிவித்தார். 


2025-09-17 04:47 GMT

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் முக்கிய வீரர் நீக்கம்


வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னாள் கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் கழற்றி விடப்பட்டார். அதே சமயம் முன்னாள் வீரர் சந்தர்பாலின் மகனான தேஜ்நரின் சந்தர்பால் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

2025-09-17 04:41 GMT

சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,270க்கு விற்பனை செய்யப்படுகிறது.


2025-09-17 04:27 GMT

2-வது ஒருநாள் போட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்



இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

2025-09-17 04:22 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சரான அப்பல்லோ டயர்ஸ்


தகுதி மற்றும் விதிமுறைகளுக்குட்பட்டு டெண்டர் விண்ணப்பத்தில் அதிக தொகையை குறிப்பிட்டு இருந்த, அரியானா மாநிலம் குருகிராமை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தை புதிய ஸ்பான்சராக இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. 2028-ம் ஆண்டு மார்ச் வரை 2.5 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள அந்த நிறுவனம் மொத்தம் ரூ.579 கோடியை ஸ்பான்சர்ஷிப்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அளிக்கும்.


2025-09-17 03:59 GMT

பயணிகள் கவனத்திற்கு.. மதுரையில் இருந்து டெல்லிக்கு இன்று முதல் தினசரி விமான சேவை


மதுரையில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமான நிறுவனம் சார்பில், நிர்வாக காரணங்களால் கடந்த 3 மாதங்களாக வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் விமான சேவை இருந்தது. தற்போது அந்த நிறுவனம் தினசரி விமான சேவையை இன்று (புதன்கிழமை) முதல் பயணிகளுக்கு வழங்க உள்ளது. அதன்படி தினமும் அதிகாலை 5.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் அந்த விமானம் காலை 8.25 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும்.


Tags:    

மேலும் செய்திகள்