இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...17-05-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
சென்னை தரமணியில் இருந்து திருவான்மியூர் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதில், கார் ஒன்று கவிழ்ந்தது. விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில்தான் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன. அதனால், இந்த விபத்திற்கும், மெட்ரோ ரெயில் பணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து உள்ளது. கிணற்றுக்குள் மூழ்கிய வேனுக்குள் குழந்தை உட்பட 3 பேர் சிக்கி கொண்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. 2 பேர் வெளியே வந்து விட்டனர். இதனை தொடர்ந்து, சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண்கள் எடுத்து பீகார் மாணவி ஜியா குமாரி சாதனை படைத்துள்ளார். 2019-ம் ஆண்டு ஜியா குமாரியின் குடும்பம், சென்னை வந்த நிலையில், பல்லாவரத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து மாணவி சாதனை படைத்திருக்கிறார்.
ஆட்டோ அப்கிரடேஷன் முறையில் ரெயில் பயணிகளுக்கு கூடுதல் சலுகையை ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளில் இருக்கை காலியாக இருந்தால் கூடுதல் கட்டணமின்றி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
படுக்கை வசதியில்லாத பகல் நேர உட்கார்ந்து பயணம் செய்யும் முன்பதிவு ரெயில்களிலும் ஆட்டோ அப்கிரடேஷன் சலுகை அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பம் அதிகரித்து மக்களை வாட்டி வந்தது. இந்த நிலையில், வந்தவாசி, விழுப்புரம், வேலூர், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
உத்தர பிரதேசத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதில், டி.எம். சவுக் பகுதியில் சாலையின் நடுவே இருந்த போக்குவரத்து மின் கம்பம் சாலையின் நடுவே சாய்ந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதனால், அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை சரி செய்யும் பணிக்கு ஊழியர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி நரேஷ் குமார் டெல்லியில் இன்று கூறும்போது, வடமேற்கு இந்தியாவின் சில இடங்களில், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியசுக்கும் கூடுதலாக உயர்ந்து உள்ளது.
அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு, ராஜஸ்தானின் சில பகுதிகளில் வெப்ப அலை இருக்கும். அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு உத்தர பிரதேசத்திலும் வெப்ப அலை பரவல் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. ராஜாம்பேட்டை, தாங்கி, வென்குடி, ஊத்துக்காடு, புளியம்பாக்கம், வாரணவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
தஞ்சை அருகே பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிமென்ட் கடையில் பணிபுரிந்த பெண்ணுக்கு அதே கடை பணியாளர்கள் உட்பட 4 பேர் வன்கொடுமை என புகார் அளிக்கப்பட்டது. பெண் அளித்த புகாரில் சண்முக பிரபு, பாஸ்கர், சரவணன், பிரகதீஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூரில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். வருவாய் ஆய்வாளர் ஜான் டைசனை கையும் களவுமாக கைது செய்தனர் லஞ்ச ஒழிப்பு போலீசார். நிலத்தை அளவீடு செய்ய லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.