பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டணி ; ராகுல் காந்தி கடும் விமர்சனம்

பீகாரின் 20 மாவட்டங்களுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொள்கிறார்.
பாட்னா,
பீகாரில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதனை தொடர்ந்து கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இதில், பீகாரில் 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.அவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்து விட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர் அல்லது முகவரியில் காணவில்லை என்றும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்து இருப்பதாகவும். அதனால் மேற்கண்ட 65 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்டவர்கள் ஆதார் கார்டு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக தேர்தல் ஆணையத்திடம் நேரடியாகவோ? ஆன்லைன் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட ஆதார் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கப்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள், வாக்கு திருட்டு தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராகுல் காந்தி வாக்கு அதிகார யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த யாத்திரையில் பீகாரின் 20 மாவட்டங்களுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொள்கிறார்.
அந்த வகையில், யாத்திரையின் 8வது நாளான இன்று அம்மாநிலத்தின் அராரியா மாவட்டத்தில் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டார். ராகுல் காந்தி கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனாதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் பைக் பயணம் மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறுகையில், மத்தியில் ஆளும் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி என்ற பெயரில் வாக்குகளை சட்டப்பூர்வமாக திருடும் நடவடிக்கையை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். மராட்டியம், அரியானா, கர்நாடகாவில் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. ஆனால், தேர்தல் ஆணையம் என்னிடம் உடனடியாக உறுதிமொழி பத்திரம் சமர்ப்பிக்கும்படி கூறுகிறது. அடுத்த சில நாட்களில் பாஜக தலைவர் அனுராக் தாகூரும் வாக்கு திருட்டு தொடர்பாக நான் கூறிய அதே குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் அவரிடம் உறுதிமொழி பத்திரம் சமர்ப்பிக்கும்படி தேர்தல் ஆணையம் கூறவில்லை.
பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 65 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பாஜக எதுவும் கூறவில்லை. இவை அனைத்தும் பாஜக, தேர்தல் ஆணையம் இடையே கூட்டணி அமைந்துள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது’என்றார்.






