திருச்செந்தூரில் நகைகள் திருடிய 2 பேர் கைது: 18 சவரன் மீட்பு

திருச்செந்தூர் பகுதியில் நடந்த நகை திருட்டை கண்டுபிடிக்க போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
திருச்செந்தூரில் நகைகள் திருடிய 2 பேர் கைது: 18 சவரன் மீட்பு
Published on

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள காந்திபுரத்தைச் சேர்ந்த சின்னத்துரை மகன் இசைவனத்துரை, ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த இவர், கடந்த 26-ம் தேதி காலை திருச்சியில் உள்ள உறவினர் திருமணத்துக்கு செல்வதற்காக குடும்பத்துடன் புறப்பட்டுள்ளார்.

அப்போது ஆடைகள், 18 சவரன் நகைகளை ஒரு பையில் வைத்து வீட்டின் அருகில் உள்ள தரைப் பாலத்தில் வைத்துவிட்டு, வீட்டுக்குச் சென்று மற்றொரு பையை எடுத்துக் கொண்டு மனைவியுடன் திரும்பி வந்து பார்த்தபோது நகைகள் வைத்திருந்த பை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவர், திருச்செந்தூர் வட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருச்செந்தூர் போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் கருப்பு நிற பைக்கில் வந்த இரு நபர்கள் பையை எடுத்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் திருச்செந்தூர் அருகே உள்ள கூரந்தான்விளையைச் சேர்ந்த முத்து மகன் வைகுண்டம்(எ) வாசகன் (வயது 29), அவரது நண்பரான திருச்செந்தூர், அடைக்கலாபுரம் அருகே உள்ள பிலோமி நகரைச் சேர்ந்த சுரேஷ் மகன் விஜயகுமார்(27) ஆகிய 2 பேரும் பையை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து திருச்செந்தூர் வட்ட போலீசார் மேற்சொன்ன 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 18 சவரன் தங்க நகைகளை மீட்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com