நகைக்கடனை செலுத்திய பின்னரும் நகையை ஒப்படைக்காத வங்கி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு


நகைக்கடனை செலுத்திய பின்னரும் நகையை ஒப்படைக்காத வங்கி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
x

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 81 கிராம் 60 மில்லி தங்க நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அழகம்மன் கோவில் தெருவை சேர்ந்த அழகுசுந்தரம் மகன் சரவணமயில். வியாபாரியான இவர் சாத்தான்குளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தேவைக்காக கடந்த 2014-ம் ஆண்டு அவரது 81 கிராம் 60 மில்லி தங்க நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். பின்னர் சில நாட்களுக்கு பிறகு வங்கியில் வட்டியுடன் மொத்தம் ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 429 திருப்பி செலுத்தி ரசீது பெற்றுள்ளார்.

நகையை மாலை 4 மணிக்கு வந்து பெற்று கொள்ளுமாறு வங்கி நிர்வாகம் கூறியதை தொடர்ந்து தனது கடைக்கு வந்துவிட்டார். பின்னர் வங்கியில் இருந்து சரவணமயிலுக்கு போன் செய்து அழைத்துள்ளனர். அவர் நகையை வாங்க சென்றபோது, அவர் செலுத்திய தொகையில் ஒரு லட்சம் குறைவதாகவும் அதை செலுத்தினால் நகையை தருவதாகவும் வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

அதற்கு சரவணமயில், தான் முழுதொகையும் செலுத்தி விட்டேன். காசாளர் தொகையை கணக்கிட்டு பின்பு பணம் செலுத்தியதற்கான ரசீதை கையொப்பமிட்டு, வங்கி முத்திரையிட்டு வழங்கியுள்ளார். நகையை திருப்பி தராமல் மோசடி செய்வதாக கூறியுள்ளார். ஆனாலும் வங்கி நிர்வாகம் நகையை திருப்பி வழங்கவில்லை. இதுகுறித்து சரவணமயில் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தும் தீர்வு கிடைக்கவில்லை.

இதனால் சரவணமயில் தூத்துக்குடி நுகர்வோர் நீதிமன்றத்தில் வங்கி காசாளர் உள்ளிட்ட வங்கி நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்தார். புகார்தாரர் தரப்பில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 9 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வங்கி தரப்பில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 10 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சக்கரவர்த்தி வழங்கிய தீர்ப்பில், புகார்தாரர் சரவணமயிலுக்கு உரிமையான 81 கிராம் 60 மில்லி நகையை அவரிடம் திருப்பி செலுத்துமாறும், அவருக்கு ஏற்பட்ட மன உழைச்சல், பொருள் நஷ்டத்திற்கு நஷ்டஈடாக ரூ.10 ஆயிரம், மேலும் வழக்கு செலவுத்தொகை ரூ.10 ஆயிரமும் புகார்தாரருக்கு 6 வாரத்திற்குள் வழங்குமாறு உத்திரவிட்டார்.

1 More update

Next Story