"எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் 'குட் பை' சொல்லப் போறாங்க.." - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் குட் பை சொல்லப் போறாங்க.. - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 16 July 2025 1:07 PM IST (Updated: 16 July 2025 3:05 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் வீடு வீடாகச் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

விமர்சனம் என்ற பெயரில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்காக அவருக்கு நன்றி.

அவரே போதும். இந்த திட்டத்தில் என்னென்ன சேவைகள் இருக்கு, என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்லி இருக்கிறார். இந்தத் திட்டத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எனக்கு எடப்பாடி பழனிசாமி டாட்டா பை..பை.. சொல்கிறார். 10 தோல்வி பழனிசாமி அவர்களே, கடந்த 10 தேர்தல்களில் மக்கள் உங்களுக்குத்தான் பை..பை.. சொன்னார்கள். வரும் தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக குட் பை சொல்லப் போகிறார்கள்.

உங்கள் குடும்பத்தை ரெய்டில் இருந்து காப்பாற்றிக்கொள்ளடெல்லிக்கு சென்று அதிமுகவை அடமானம் வைத்துள்ளீர்கள். டெல்லியிடம் சிக்கித் தவிக்கும் உங்களை நம்பி மக்கள் ஏமாற தயாராக இல்லை, ஸ்டாலினிடம் தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளதாக மக்கள் நம்புகிறார்கள்

10 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தது?. குறைந்தபட்சம் மீனவர்கள் கைது செய்யப்படுவதைகூட தடுக்கவில்லை

தமிழக மீனவர்களின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. கச்சத்தீவை தாரைவார்த்த விவகாரத்தில் பாஜக அரசு அரசியல் செய்கிறது

மயிலாடுதுறையின் மருமகனாக வந்திருந்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெருமை. நேற்று கொட்டும் மழையிலும் மக்கள் என் மீது அன்பு மழை பொழிந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்டத்திற்கும் சீரான, சமமான திட்டங்களை பார்த்து பார்த்து வழங்கி வருகிறோம். மக்களை நேரில் சந்தித்து தேவைகளை உணர்ந்து செயல்படும் அரசாக 4 ஆண்டு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மயிலாடுதுறைக்கு 8 புதிய திட்டங்கள்: பட்டியலிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

* மயிலாடுதுறை நீடூரில் ரூ.85 கோடியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்

* மங்கநல்லூர் - ஆடுதுறை சாலை ரூ.45 கோடியில் இரு வழி சாலையாக மேம்படுத்தப்படும்

* சுதந்திர போராட்ட தியாகி சாமி நாகப்பனுக்கு உருவசிலை நிறுவப்படும்.

* குத்தாலம் வாய்க்கால் ரூ.7 கோடி செலவில் புனரமைக்கப்படும்

* தாழம்பேட்டை, வெண்ணக்கோவில் கிராமங்களில் கடற்கரையோர கட்டமைப்பு வசதிகள் ரூ.8 கோடியில் மேம்படுத்தப்படும்

* சீர்காழிக்கு ரூ.5 கோடி செலவில் நகராட்சி அலுவலகம் கட்டி தரப்படும்

* பூம்புகார் துறைமுகத்தில் ரூ.4 கோடியில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்

* தேர்கீழ வீதி உள்ளிட்ட 4 இடங்களில் மழை நீர் வடிகாலுடன் கூடிய சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.8 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்

1 More update

Next Story