கடலூர்: மின்கம்பிகள் அறுந்து விழுந்து சென்னை தம்பதி உள்பட 3 பேர் பலி


கடலூர்: மின்கம்பிகள் அறுந்து விழுந்து சென்னை தம்பதி உள்பட 3 பேர் பலி
x

சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்த தம்பதியினர் வாக்காளர் விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதிக்கு சென்றனர்.

கடலூர்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்காக சென்ற தம்பதிக்கு நேர்ந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சி.சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மரியசூசை (வயது 70). இவரது மனைவி பெலோன்மேரி(60). இந்த தம்பதிக்கு ஆரோக்கியதாஸ்(35) என்ற மகனும், 6 மகள்களும் உள்ளனர்.

கார் டிரைவரான ஆரோக்கியதாஸ், சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடன், அவரது பெற்றோரும் ஒரே வீட்டில் இருந்தனர். மரியசூசை, அடையாறில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றினார்.

இந்த நிலையில் சொந்த ஊரான சி.சாத்தமங்கலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெறுவதாகவும், அதற்காக நேரில் வந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருமாறும் உறவினர்கள் கூறியுள்ளனர். இதற்காக மரியசூசை, தனது மனைவியுடன் நேற்று காலை சொந்த ஊருக்கு சென்றார்.

அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் இருவரும் பங்கேற்றனர். பிரார்த்தனை முடிந்ததும், மரியசூசை, பெலோன்மேரி ஆகிய 2 பேரும் அதே கிராமத்தை சேர்ந்த வனதாஸ் மேரி(70) என்பவருடன் கிறிஸ்தவ ஆலயத்தின் முன்புறம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தது.

மதியம் 2.45 மணி அளவில் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் இருந்த புளியமரம் திடீரென வேரோடு சாய்ந்து ஆலயத்திற்கும், ஒரு வீட்டிற்கும் இடையில் சென்ற மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்து, 3 பேர் மீதும் விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அருகில் நின்று கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த கனகராஜ்(58) என்பவர் காயமடைந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், உடனடியாக மின் வினியோகத்தை துண்டித்தனர். பின்னர் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோன்று, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சபரிநாதன் (20) என்பவர் மின்சாரம் தாக்கி பலியானார்.

1 More update

Next Story