"மத்திய அரசால் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை.. " - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மத்திய அரசால் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை..  - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 26 Jun 2025 12:34 PM IST (Updated: 26 Jun 2025 1:48 PM IST)
t-max-icont-min-icon

நாட்டின் மொத்த வளர்ச்சியில் சுமார் 10 சதவீதம் பங்களிப்பு தமிழ்நாடு உடையது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்,

தஞ்சாவூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்றுள்ள முதல்-அமைச்சர், நேற்று மாலை கல்லணையை திறந்து வைத்தார். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் திருப்பத்தூரில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

காட்பாடிக்கு ரெயிலில் வந்திறங்கியதில் இருந்து மக்களின் வரவேற்பில் மனம் நிறைந்துவிட்டது. வேலூரில் 5 மணிக்கு தொடங்கி, திருப்பத்தூருக்கு 11 மணிக்கு வந்து சேர்ந்தோம். திமுக தொண்டர்கள் வரவேற்போடு, பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் பொதுமக்கள் என பல தரப்பினரும் வரவேற்பு அளித்தனர்.

2026 மட்டுமல்ல, 2031, 2036 என எப்போது இருந்தாலும் நாம்தான் என்பதை வரவேற்பு காட்டியிருக்கிறது. பொறுப்பில் உள்ள துறை மட்டுமல்ல, மாவட்டத்தையும் சிறப்பாக வளர்த்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.

ஆம்பூர் பிரியாணி, சந்தனக்காடு உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் திருப்பத்தூர். கடந்த கால ஆட்சியாளர்களால் சீரழிந்த நாட்டை, வரலாறு காணாத வளர்ச்சிக்கு கொண்டு சென்றுள்ளோம், பல்வேறு திட்டங்களை செய்துள்ளோம்... செய்து கொண்டே இருப்போம்

இந்தியாவின் ஜிடிபியில் தமிழகத்தின் பங்கு 9.21 விழுக்காடு. தலைநகரை மட்டும் வளர்க்கவில்லை, அனைத்து நகரங்களையும் வளர்த்துள்ளோம்

திருப்பத்தூரில் 14 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன, 211 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம். நாட்றம்பள்ளியில் தோல் அல்லாத காலணி பூங்கா அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. பொருளாதார வளர்ச்சியில் 9.69 சதவீதம் உடன் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு புதிய உச்சம் பெற்றுள்ளதாக மத்திய அரசே கூறியுள்ளது

நாட்டின் மொத்த வளர்ச்சியில் சுமார் 10 சதவீதம் பங்களிப்பு தமிழ்நாடு உடையது. தொழிற்சாலை நிறைந்த மாநிலமாக உருவாகி வருகிறது தமிழ்நாடு.

தமிழ்நாட்டை மதத்தால், சாதியால் பிளவுபடுத்த பாஜகவினர் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். மக்களை பற்றி கவலைப்படாமல் மதத்தை பற்றி கவலைப்படுகிறார்கள். மிஸ்டு கால் தந்தும் கட்சியை வளர்க்க முடியாததால் அரசியல் லாபத்திற்காக கடவுளை மிஸ்யூஸ் செய்கிறார்கள்

பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டித் தரும் திட்டம் ஒன்று உள்ளது. ஒரு வீடு கட்ட ரூ.1.20 லட்சம் தராங்க. இந்த காசுல வீடு கட்ட முடியுமா? அதுலயும் ரூ.72,000 மட்டும்தான் மத்திய அரசு தருது. மீதி கூடுதலாக ரூ.1.62 லட்சம் மாநில அரசு கொடுத்து வீடு கட்டித் தருகிறோம். பெயர்தான் அவங்களோடது. நிதி நம்முடையது.

அதனாலதான் ஏற்கனவே நான் ஒரு டயலாக் சொன்னேன். மாப்பிள்ளை அவருதான். ஆனா அவரு போட்டிருக்கிற சட்டை என்னோடது

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து திருப்பத்தூருக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதன்படி

1. குமாரமங்கலத்தில் ரூ.6 கோடியில் துணை மின்நிலையம் அமைக்கப்படும்.

2. ஆம்பூர் பகுதியில் புதிய நூலக கட்டிடம் அமைக்கப்படும்.

3. 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நல்ல குண்டா பகுதியில் ரூ.200 கோடி மதிப்பில் சிப்காட் அமைக்கப்படும்.

4. ஆலங்காயம் ஊராட்சி நெக்னாமலை பகுதியில் ரூ.30 கோடி மதிப்பில் 7 கிமீ-க்கு சாலை அமைக்கப்படும்.

5. திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தில் ரூ.18 கோடி மதிப்பில் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக நேற்று (25.6.2025) சென்னை, சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து வேலூர் புறப்பட்டுச் சென்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு காட்பாடி ரெயில் நிலையத்தில்,அமைச்சர்ள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், வேலூர், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் வேலூர் மாவட்டத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வரும் நபர்களுக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் முதல்-அமைச்சர் வழங்கினார்.

பின்னர், வேலூர் மாவட்டம், பூதூரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் (26.6.2025) தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், 174 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 68 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 273 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,00,168 பயனாளிகளுக்கு வழங்கினார்.

1 More update

Next Story