சென்னை விமான நிலையத்தில் ரூ.1.87 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 3 பேர் குருவியாக செயல்பட்டு தங்கத்தை கடத்தி வந்தபோது சிக்கி உள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்தில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது தாய்லாந்துக்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு திரும்பிய சென்னையைச் சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவரது உடைமைகளில் எதுவும் இல்லை. அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது மலக்குடலில் 3 தங்க உருளைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து சுமார் ரூ.87 லட்சம் மதிப்புள்ள 733 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த 2 வாலிபர்களையும் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்களது உடைமைகளில் சோதனை செய்தபோது தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 820 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.1 கோடியே 87 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பிடிபட்ட 3 வாலிபர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
3 பேரும் குருவியாக செயல்பட்டு தங்கத்தை கடத்தி வந்தபோது சிக்கி உள்ளனர். இவர்களை தாய்லாந்து, மலேசியாவுக்கு அனுப்பிய தங்கம் கடத்தல் கும்பல் யார்? என்று சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.






