எச்சூர் கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்

எச்சூர் கிராமத்தில் 950 ஏக்கர் நஞ்சை நிலம் எடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் அந்த விவசாய நில உரிமையாளர்களின் வீடுகளில் அறிவிப்பை வழங்கி உள்ளது.
எச்சூர் கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்
Published on

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், எச்சூர் கிராமத்தில் ஆயிரம் ஏக்கர் நஞ்சை விவசாய நிலங்கள் உள்ளன. இதில் 950 ஏக்கர் விவசாய நிலங்களை எச்சூர், பூதனூர் மற்றும் மேட்டுப்பாளையம் சிப்காட் திட்டத்திற்காக மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்த அறிவிப்புகள் வெளியிட்டுள்ளன. அந்தப் பகுதி விவசாயிகளுக்கும் இது சம்பந்தமாக அறிவிப்புகள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் எதிர்கால வாழ்வாதாரம் குறித்து அச்சத்தில் உள்ளனர்.

எச்சூர் கிராமத்தில் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. இந்த கிராமத்தில் இரண்டு பெரிய ஏரிகள் அமைந்து அந்த ஏரி நீர் பாசனத்தை கொண்டு ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலத்தில் நெல் சாகுபடி செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த கிராம மக்கள் விவசாயமே முழு நேர தொழிலாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் எச்சூர், பூதனூர் மற்றும் மேட்டுப்பாளையம் சிப்காட் திட்டத்தின் விரிவாக்கத்திற்காக எச்சூர் கிராமத்தில் 950 ஏக்கர் நஞ்சை நிலம் எடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் அந்த விவசாய நில உரிமையாளர்களின் வீடுகளில் அறிவிப்பை வழங்கி உள்ளது.

இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற விவசாயிகள் மிகப்பெரும் அச்சத்திலும் மனவேதனையிலும் உள்ளனர். ஏனெனில், இவர்களின் வாழ்க்கையின் வாழ்வாதாரத்திற்கு இந்த நஞ்சை விளைநிலங்களே உறுதுணையாக இருக்கின்றன. இந்த நிலங்களை நம்பி தான் இவர்களின் எதிர்காலமும், இவர்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் உள்ளன. இப்படி இருக்க, இந்த விளைநிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுக்கின்ற நடவடிக்கைகள் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

நிலமில்லா ஏழைகளுக்கு நிலம் பகிர்ந்து அளிக்கப்படும் இந்த காலத்தில், தமிழக அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்தி விவசாயிகளின் மறுவாழ்விற்கு எந்தவித மாற்று இடத்தை தராமல் இழப்பீடு மட்டுமே தர முன்வருவது ஏற்புடையது அல்ல. ஆகவே எச்சூர் கிராமத்தில் விளைநிலங்களை கையகப்படுத்தும் முடிவை மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் உடனே கைவிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

தொழில் வளர்ச்சிக்கு, விவசாயத்திற்கு தகுதியற்ற வறண்ட பகுதிகளில் கட்டுமானத்திற்கு தகுதியாக உள்ள இடங்களை தேர்வு செய்து, அந்தப் பகுதியில் சிப்காட் நிறுவனங்களை அமைக்க மாநில அரசு வழி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com