"தீக்குளித்தால் இப்படி காயம் ஏற்படும் என்று நினைக்கவில்லை.." - உயிரிழந்த 9-வகுப்பு மாணவி உருக்கம்


தீக்குளித்தால் இப்படி காயம் ஏற்படும் என்று நினைக்கவில்லை.. - உயிரிழந்த 9-வகுப்பு மாணவி உருக்கம்
x
தினத்தந்தி 20 Nov 2025 6:47 PM IST (Updated: 20 Nov 2025 7:00 PM IST)
t-max-icont-min-icon

மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்


கோவை மாவட்டம் வால் பாறை அருகே ரொட்டிக்கடையை சேர்ந்தவர் உள்ள சக்திவேல்குமரன் (வயது39). இவர் தனியார் சோலார் நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வல்சலகுமாரி. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் ரொட்டிக்கடை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

சக்திவேல் குமரன் வேலை விஷயமாக வெளியூர் சென்று விடுவார். கடந்த சில நாட்களாக அவர் திண்டுக்கல்லில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த 10-ந் தேதி வல்சலகுமாரி வேலைக்கு சென்று விட்டார். இரு சகோதரிகளின் ஒருவரை அவரது தாத்தா பள்ளிக்கு விடுவதற்கு அழைத்து சென்றார்.

அப்போது 9-ம் வகுப்பு மாணவி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது திடீரென மாணவி உடலில் தீ பற்றி எரிந்து காயம் ஏற்பட்டதால் அவர் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து பார்த்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய மாணவியை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்போது அங்கிருந்த டாக்டர்கள் தீ பற்றியது எப்படி என கேட்டனர். அதற்கு பெற்றோர், வீட்டில் வெந்நீர் வைத்தபோது பட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிச்சை அளித்து வந்த நிலையில் மாணவி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே, வெந்நீர் வைத்த போது மாணவிக்கு தீக்காயம் ஏற்பட்டதாக கூறிய நிலையில், தற்போது மாணவி ஆசிரியைகளின் கொடுமை தாங்காமல் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அவரது சக்திவேல்குமரன் கூறுகையில், “எனது மகள் வால்பாறை ரொட்டிக்கடையில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். எனது மகள் படித்து வரும் பள்ளியில் பணிபுரிந்து வரும் அறிவியல் ஆசிரியை எனது மகளை மற்ற மாணவர்களின் முன்பாக பேசி அவமானப்படுத்தி உள்ளார். இது அவளுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. 2 நாள் விடுமுறை எடுத்து விட்டு மீண்டும் பள்ளி சென்ற போது, தமிழ் ஆசிரியை நீ எதற்காக விடுமுறை எடுத்தாய்? காய்ச்சலா? என கிண்டலில் கேட்டு, எனது மகளை சக மாணவ,மாணவிகள் முன்பு கன்னத்தில் அடித்துள்ளார்.

மேலும் அந்த பள்ளியில் உள்ள ஆங்கில ஆசிரியை ஒருவர் எனது மகளின் உருவம், தலைமுடி குறித்து கிண்டலாக பேசியதுடன், புத்தகங்களை தூக்கி அவர் மீது எறிந்துள்ளார். மற்ற மாணவர்கள் முன்பாக ஆசிரியைகள் இதுபோன்று செய்ததால் எனது மகள் மனவேதனை அடைந்துள்ளார். ஆசிரியைகள் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால், கடந்த 10-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எனது மகள் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவர் வால்பாறை அனுமதிக்கப்பட்ட போது போலீசார் வந்து வாக்குமூலம் பெற்று சென்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எனது மகள் உயிரிழந்து விட்டார். மருத்துவமனையில் எனது மகள் சாவுக்கு காரணமான 3 ஆசிரியைகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக மாணவியும் இதே குற்றச்சாட்டை கூறி இருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவர் பேசிய வீடியோவில் இதனை தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே மாணவி சாவுக்கு காரணமான 3 ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவியின் பெற்றோர் கோவை மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.

இந்நிலையில் மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீக்குளித்தால் இப்படி காயம் ஏற்படும் என்று நினைக்கவில்லை - மாணவி உருக்கம்

மாணவி அளித்து உள்ள வாக்கு மூலத்தில் ஆசிரியர்கள், எனது பெற்றோரிடம் தன்னை பற்றி புகார் செய்வதாக கூறினர். இதனால் அச்சம் அடைந்து மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தேன். உடலில் காயம் இருந்தால் அம்மா என்னை கண்டிக்காமல் உருக்கம் விட்டுவிடுவார் என கருதினேன். காயம் சிறிய அளவே இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இந்த அளவுக்கு ஏற்படும் என்று நினைக்கவில்லை என்றார். மாணவியின் இந்த வாக்குமூலம் அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளது.


1 More update

Next Story