23 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான மருந்து நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

மருந்தியல் துறை அலுவலர்கள் அலட்சியமாக இருந்ததே 23 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
23 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான மருந்து நிறுவனம் மற்றும் ஆய்வு துறை சார்ந்த அலுவலர்கள் மீது கடுமையாக சட்ட நடவடிக்கை வேண்டும்.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மற்றும் ராஜஸ்தானிலும் 'கோல்ட்ரிப்' மற்றும் 'நெக்ஸ்ட்ரோ டி.எஸ்' என்ற 2 வகையான இருமல் மருந்துகள் வழங்கிய 1 முதல் 6 வயதுக்குட்பட்ட 20-க்கும் மேலான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில் நெக்ஸ்ட்ரோ டி.எஸ். மருந்து குஜராத் மாநில நிறுவனத்தாலும், கோல்ட்ரிப் மருந்து தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் ஃபார்மா என்ற நிறுவனத்தாலும் தயாரிக்கப்பட்டவை. கோல்ட்ரிப் மருந்தை தற்போது ஆய்வு செய்ததில் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் "டை எத்திலின் கிளைக்கால்" என்ற ரசாயனம் அனுமதிக்கப்பட்ட 0.1 சதவீத அளவை விட 48 சதவீதம் அதிகம் உள்ளது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.
குழந்தைகள் உயிரிழப்புக்கு தமிழக மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என்று கூறப்படுகிறது. ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனத்துக்கு 2011-ல் உரிமம் வழங்கிய நிலையில், இந்த நிறுவனம் தற்போது மோசமான உள்கட்டமைப்புடனும், பாதுகாப்பு விதிகளை மீறி இயங்கி வந்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் ஜி.எம்.பி. தரச்சான்றிதழை இந்த நிறுவனம் பெறவில்லை. மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் "சுகம்" இணையதளத்தின் பதிவின் கீழ் இந்த நிறுவனம் இணைக்கப்படவில்லை. ஆனால் இவைகளையெல்லாம் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டிய மருந்தியல் துறை அலுவலர்கள் அலட்சியமாக இருந்ததே இந்த குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம்.
மக்கள் மருத்துவர்களையும், அவர்கள் பரிந்துரைக்கின்ற மருந்துகளையும் தங்கள் ஆகப்பெரும் நம்பிக்கையாக கருதுகிறார்கள். நோய்களைக் குணப்படுத்தும், உயிர்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். நோயை குணப்படுத்த வேண்டிய மருந்தே உயிரை குடிக்கும் விஷமாக மாறி இருப்பது கொடுமையானது. ஒவ்வொரு மருந்திலும் கலக்கப்படும் வேதியல் பொருட்கள், அதன் அளவீடுகள் அவ்வப்போது கணக்கிடப்பட்டு மருந்து கட்டுப்பாட்டுத் துறையினர் ஒப்புதல் அளித்த பிறகுதான் மருந்து, மாத்திரைகள் தயாரிக்கப்படும் அதற்கு அனுமதியும் வழங்கப்படும். அவ்வாறு தயாரிக்கப்படும் மருந்தகங்களில் மருந்தியல் துறை அலுவலர்கள் கால இடைவெளியில் சோதனைகள் நடத்தி மாதிரிகள் எடுத்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இப்படி பல நிலைகளில் ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள் அலட்சியமாக பணி செய்து இருந்துள்ளனர். இதன் காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.
மனித உடல் சார்ந்து செயல்படும் உணவு கட்டுப்பாட்டு துறை, மருந்து ஆய்வு மற்றும் அனுமதி துறையில் அலட்சியமாக, முறைகேடு உடன் இருந்தால் அது பல மனித உயிர்களுக்கும், உடல்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி மனித சமூகத்திற்கு பேரிழப்பாக இருக்கும் என்பதை நிகழ்வு காட்டி உள்ளது. இதில் தவறிழைத்த நிறுவனத்தினர் மற்றும் அவற்றை கண்காணிக்க தவறிய அனைத்து நிலை அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை அவசியம் வேண்டும். இந்த நடவடிக்கையை பார்த்து பிற மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களும் மருந்துகள் துறை ஆய்வு அலுவலர்களும் முறையாக செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திட வேண்டும்.
இந்த குழந்தைகள் உயிரிழப்பை தொடர்ந்து தற்போது மருந்தியல் துறைகளின் அதிகாரிகள் 'அதிரடி'யாக பல இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்கின்றனர். தொடர்ந்து அவர்கள் இந்த ஆய்வை தொடர் பணியாக கால இடைவெளியில் மாதிரி எடுத்து ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும்.
எனவே மத்திய, மாநில அரசுகள் மனிதர்கள் உட்கொள்ளும் உணவுகள், மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். இதில் அலட்சியம் காட்டும், முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் அதை கண்காணிக்கும் துறை அலுவலர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை வேண்டும். மேலும் தவறிழைத்த நிறுவனங்களும், அவர்கள் தயாரித்த மருந்துகளின் பெயர்களும் மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். அத்துடன் அதே நிறுவனத்தினர் வேறு பெயரில் மருந்து தயாரிக்க அனுமதி கேட்கும் பட்சத்தில் கவனமாக ஆய்வு செய்யவேண்டியது அவசியம்.
மக்களும் தங்களுக்கும், குழந்தைகளுக்கும் மருத்துவர்களின் ஆலோசனை, பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களை நேரடியாக நாடி தன்னிச்சையாக மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதையும், குழந்தைகளுக்கு அளிப்பதையும் தவிர்க்க வேண்டியது கட்டாயம்.
மருத்துவர்கள் மருந்து நிறுவனங்கள் பரிந்துரைக்கின்ற மருந்துகளை முறையாக ஆய்வு செய்து ஆலோசித்து அதன் தன்மையை பற்றி முழுமையாக அறிந்து நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






