திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலியில் கணவன் மனைவி இடையிலான பிரச்சினையின் முன் விரோதத்தின் காரணமாக பெண்ணின் குடும்பத்தினர்கள் சேர்ந்து வாலிபரை கொலை செய்தனர்.
திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
Published on

கடந்த 2017-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே பொட்டல் காலனியில், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையின் முன் விரோதத்தின் காரணமாக பெண்ணின் குடும்பத்தினர்கள் சேர்ந்து வெற்றிவேல் (வயது 23) என்பவரை கொலை செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் குற்றவாளிகளான மாரிமுத்து(37), ஜெகதீஸ்(32), சீத்தாராமன(43), இஷா(35), சுடலைமாடி(61) ஆகிய 5 பேருக்கும் எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிபதி செல்வம் நேற்று குற்றவாளிகளுக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முதல் இரண்டு குற்றவாளிகளான மாரிமுத்து, ஜெகதீஷ் ஆகிய 2 பேருக்கும் கூடுதலாக, IPC 148-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும், IPC 449-ன்படி 9 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து, மேற்சொன்ன தண்டனைகளை ஏக காலத்தில் (concurrent) அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் மற்றும் முக்கூடல் காவல்துறையினர், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மங்கையர்கரசி (தற்போது நாங்குநேரி அனைத்து மகவிர் காவல் நிலையம்), சங்கரேஸ்வரி (தற்போது திருநெல்வேலி மாநகரம்), நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 24 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 80 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 22 பேர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com