அ.தி.மு.க.வின் ஈரோடு கோட்டை, செங்கோட்டையனால் திசை மாறுமா..?


அ.தி.மு.க.வின் ஈரோடு கோட்டை, செங்கோட்டையனால் திசை மாறுமா..?
x

விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் கே.ஏ.செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் இன்று இணைந்தார்.

ஈரோடு,

1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோதே அக்கட்சியில் பயணித்து வந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். 1977-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு தேர்தலில் மட்டுமே தோல்வியடைந்த அவர், ஈரோடு மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்தவராக திகழ்ந்தார்.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், முதலில் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு, அ.தி.மு.க.வில் இருந்தும் நீக்கப்பட்டார்.

அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்தார்.

அதன்படி, இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் கே.ஏ.செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். கட்சியில் இணைந்த அடுத்த நிமிடமே அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4 மாவட்டங்களுக்கு (கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி) அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கே.ஏ.செங்கோட்டையனின் அரசியல் அனுபவம் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சிக்கு பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

கே.ஏ.செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் 8 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. அதாவது, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன.

இதில், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஈரோடு மேற்கு, அந்தியூரில் தி.மு.க.வும், ஈரோடு கிழக்கில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன. பெருந்துறை, பவானி, கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர் ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், மொடக்குறிச்சியில் அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வும் வெற்றி பெற்றிருக்கிறது.

ஆக, 8-ல் 5 தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், அ.தி.மு.க.வின் கோட்டையாகவே ஈரோடு திகழ்ந்து வருகிறது. தற்போது, அ.தி.மு.க.வின் கோட்டையை கட்டிக்காத்த செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பதால், அ.தி.மு.க.வின் செல்வாக்கு அங்கு குறைந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் செல்வாக்கு அதிகரிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஈரோடு கொங்கு மாவட்டங்களில் ஒன்று. அருகே உள்ள சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். கொங்கு மாவட்டங்களில் கவுண்டர்கள் வாக்கு அதிகம். அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி, கே.ஏ.செங்கோட்டையன் இருவருமே கவுண்டர்கள். எனவே, கவுண்டர்களின் வாக்கு யாருக்கு அதிகம் கிடைக்கும் என்ற தேர்தல் கணக்கு இப்போதே தொடங்கிவிட்டது. பொருத்திருந்து பார்ப்போம்.

1 More update

Next Story