சென்னைக்கு தெற்கே 220 கி.மீ. தொலைவில் “டிட்வா புயல்” - கரையை விட்டு விலகுகிறதா..?
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் டிட்வா புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
சென்னை,
வங்கக்கடலில் உருவான ’டிட்வா’ புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் டிட்வா புயல் வடக்கு நோக்கி நகர்ந்து இன்று, நவம்பர் 30, 2025 அன்று காலை 5.30 மணிக்கு அதே பகுதியில் மையம் கொண்டிருந்தது. இது காரைக்காலுக்கு கிழக்கு-வடகிழக்கில் சுமார் 90 கிமீ, வேதாரண்யத்திற்கு வடகிழக்கில் 120 கிமீ, புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 130 கிமீ, யாழ்ப்பாணத்திற்கு வடக்கு-வடகிழக்கில் 170 கிமீ மற்றும் சென்னைக்கு தென்-தென்கிழக்கில் 220 கிமீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் இது வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. வடக்கு நோக்கி நகரும் போது, சூறாவளி புயல் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இன்று (நவம்பர் 30) நண்பகல் மற்றும் மாலை நேரங்களில் தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையிலிருந்து குறைந்தபட்சம் 70 கி.மீ மற்றும் 30 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. .
இதன்படி அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு கடலோர பகுதிகளுக்கு இணையாக புயல் வடதிசையில் நகரும் என்று கூறப்படுகிறது. கடற்கரையில் இருந்து 25 முதல் 50 கி.மீ. தள்ளி வங்கக்கடலில் டிட்வா புயல் பயணித்து வந்தநிலையில், தற்போது 30 முதல் 70 கி.மீ. விலகி கடலுக்குள் பயணிக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் சென்னை கடலோரப் பகுதிகளுக்கு அருகே இன்று மாலை வரும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ’டிட்வா’ புயல் கரையை கடக்காமல், கரையை தொட்டபடியே பயணிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரைக்கு அருகே வந்து நின்று வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழையை கொட்ட தயாராகி வருகிறது. நேற்று இரவில் இருந்தே மழை தொடங்கிவிட்ட நிலையில், இன்றும் மழை வெளுத்து வாங்கும் என சொல்லப்படுகிறது.
ரெட் அலர்ட்
அதன்படி, வடமாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் (ரெட் அலர்ட்), சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
’டிட்வா’ புயல் கரையை கடக்காமல், கரையை தொட்டபடி, கடல் பகுதியிலேயே வலுவிழந்துவிடும் என்றும், அதன் பின்னர் படிப்படியாக மழையின் தாக்கம் குறைந்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
புயல் காரணமாக தென்கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலான வேகத்திலும், சென்னை உள்பட ஏனைய வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மணிக்கு 60 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலான வேகத்திலும் பலத்தகாற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பை எதிர்கொள்ள மாநில அரசு தயாராகி வருகிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் வட கடலோர மாவட்டங்களில் முகாமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காலை 8.30 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில்..
வட தமிழக கடற்கரையை டிட்வா புயல் அடைந்துள்ளது என்றும், நாகையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என்றும், சென்னைக்கு தெற்கே 220 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது என்றும், இதனால் சென்னையில் இன்று காலை முதல் விட்டுவிட்டு மழையும், அவ்வப்போது தரைக்காற்றும் வீசும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
டிட்வா புயல் வலுவிழந்துவிட்டது - பிரதீப் ஜான்
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது பதிவில், “வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிழந்துவிட்டது. மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக டிட்வா புயல் மாறிவிட்டது. டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டது. இன்று மாலை புயலின் சுழற்சியால் மீண்டும் மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.








