உக்ரைனுக்கு எதிரான போர் முடிவுக்கு வருமா..? - டிரம்ப், புதின் அடுத்த வாரம் அமீரகத்தில் சந்திப்பு

கோப்புப்படம்
உக்ரைன் போர் நெருக்கடிக்கு மத்தியில் டிரம்ப், புதின் இருவரும் அடுத்த வாரம் சந்தித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ,
ரஷிய அதிபர் மீது அதிகரித்து வரும் விரக்தியை வெளிப்படுத்தி, புதிய தடைகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்திய பின்னர், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு திருப்புமுனையை எதிர்பார்க்கும் நிலையில், விளாடிமிர் புதினும், டொனால்ட் டிரம்பும் வரும் நாட்களில் சந்திப்பார்கள் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக உள்ளார்.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதற்கு உக்ரைன் தரப்பில் ஒப்புக்கொண்டபோதும், ரஷியா இன்னும் இறங்கி வரவில்லை.
எனவே அந்த நாடு மீது அதிக பொருளாதார தடையை விதிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) வரை ரஷியாவுக்கு அவர் கெடு விதித்து உள்ளார். இதற்கு மத்தியில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மாஸ்கோ சென்றார். அவர் நேற்று முன்தினம் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து புதின், டிரம்ப் இருவரும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் அளித்து உள்ளார். அதன்படி இந்த சந்திப்பு அடுத்த வாரம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக புதினின் வெளியுறவு ஆலோசகர் யுரி உஷாகோவ் தெரிவித்தார். எனினும் சந்திப்பு நடைபெறும் இடம் குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
இது குறித்து அவர், ‘முதலில் டிரம்புடன் ஒரு இருதரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு செய்வது என நாங்கள் பரிந்துரைத்தோம். இந்த சந்திப்பு மிகவும் வெற்றிகரமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும் என நம்புகிறோம்’ என தெரிவித்தார். அதேநேரம் இந்த சந்திப்பில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பங்கேற்க செய்வது என்ற டிரம்ப் தூதரின் பரிந்துரை குறித்து விவாதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் டிரம்புடனான சந்திப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வாய்ப்பு இருப்பதாக புதின் அறிவித்து உள்ளார். அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானை கிரெம்ளின் மாளிகையில் நேற்று சந்தித்து பேசியபின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்த சந்திப்புக்கான பரிந்துரையை யார் வைத்தது? என்ற கேள்விக்கு, ‘அது முக்கியமில்லை, இரு தரப்பும் ஆர்வத்தை வெளியிட்டன’ என புதின் கூறினார்.
எதிர்கால பேச்சுவார்த்தைகளில் ஜெலன்ஸ்கியின் பங்கேற்புக்கான சாத்தியம் குறித்த கேள்விக்கு, ‘நான் அதற்கு எதிராக இல்லை என்பதை பலமுறை தெரிவித்து விட்டேன். இது சாத்தியமானதுதான். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன’ என்றும் பதிலளித்தார்.
உக்ரைன் போருக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் ரஷியா தலைவர்கள் சந்தித்து பேசுவது போரை முடிவுக்கு கொண்டு வருமா? என சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரம்ப் 2-வது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றபின் புதினை சந்திப்பது இது முதல் முறையாகும்.






