எடப்பாடி பழனிசாமியுடன் பா.ம.க. எம்எல்ஏ சந்திப்பு - கூட்டணி பேச்சுவார்த்தை?
கூட்டணி விஷயத்தில் பா.ம.க.வில் இழுபறி நீடித்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. வரும் 20-ந்தேதி முதல் வேட்பு மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது? என்பது பற்றி பா.ம.க. எந்த முடிவையும் எடுக்காமலேயே உள்ளது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விரும்புவதாகவும். ஆனால் பா.ஜனதா கூட்டணியை அன்புமணி ராமதாஸ் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்படி பா.ம.க. மேலிடத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவி வருவதாலேயே கூட்டணி விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. எம்எல்ஏ அருள் சந்தித்து பேசி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் முகாம் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.