பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தால் தி.மு.க. பயப்படுவது ஏன்..? - அண்ணாமலை கேள்வி
தி.மு.க.வுக்கு வாக்களித்தால் தங்கத்தோடும், ரூ.2,000 பணமும் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வருவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை,
கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று காலை 8 மணிக்கு சரவணம்பட்டி விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி நாளை (இன்று) தமிழகம் வருகிறார். அவர், மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகளில் மாலை 6 மணிக்கு மேல் வாகன பேரணியில் கலந்து கொள்கிறார். மறுநாள் வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி, வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
அதை முடித்துக்கொண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி, கோவை, பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். 12-ந் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். அப்போது அவர் மற்ற தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தொடர்புபடுத்தி ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சதி வேலை செய்து அவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையமும், பறக்கும் படையினரும் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர்.
கோவையில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தால் தங்கத்தோடும், ரூ.2,000 பணமும் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வருகிறது.
நாட்டின் தலைநகராக நாக்பூரை எப்படி மாற்ற முடியும்?. தெளிவு இன்றி பேசும் கமல்ஹாசன் மருத்துவ ஆலோசனை செய்து கொள்ள வேண்டும். ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக தனது கட்சியை அவர் தி.மு.க.விற்கு விற்று விட்டார். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதில் தி.மு.க.வுக்கு என்ன பயம்? என்று தெரியவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 33 மாதங்களில் எத்தனை கிராமங்களுக்கு சென்று தங்கி இருக்கிறார் என்று தி.மு.க.வினரால் சொல்ல முடியுமா?. அவர் வெளிநாடுகளுக்கு செல்வார். தமிழகத்தில் நகரங்களுக்கு சென்று கைகாட்டிவிட்டு செல்வார்.
காலை உணவு திட்டம் தி.மு.க.வின் யோசனையால் உருவான திட்டம் என கூறி வருகிறார்கள். தேசிய கல்வி கொள்கையில் காலை உணவு திட்டம் உள்ளது. பெங்களூருவில் இஸ்கான் அமைப்பினர் அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கி வருகின்றனர். இதற்காக அனுமதி கேட்டபோது தமிழக அரசு மறுத்தது.
சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி கோவையின் தேர்தல் களத்தை இயக்கி வருகிறார். அவர் சிறையில் இருந்து எழுதும் கதையை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செயல்படுத்தி வருகிறார். தங்கச்சுரங்கத்தையே கோவையில் வந்து கொட்டினாலும் பா.ஜனதா தான் வெற்றி பெறும். 60 சதவீதம் வாக்கு எங்களுக்கு கிடைக்கும்" என்று அவர் கூறினார்.