அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ஜ.க., பா.ம.க. வராதது இழப்பா? - தந்தி டி.வி.க்கு எடப்பாடி பழனிசாமி சிறப்பு பேட்டி


அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ஜ.க., பா.ம.க. வராதது இழப்பா? - தந்தி டி.வி.க்கு எடப்பாடி பழனிசாமி சிறப்பு பேட்டி
x
தினத்தந்தி 5 April 2024 11:33 AM IST (Updated: 5 April 2024 4:10 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ஜ.க., பா.ம.க. வராதது இழப்பா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

எடப்பாடி பழனிசாமி தந்தி டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டி விவரம் வருமாறு:-

* கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி இலக்கு எவ்வளவு?

பதில்:- தமிழ்நாட்டில் 39 தொகுதி, புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

பா.ஜ.க. கூட்டணி முறிவு

* கேள்வி:- பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு காரணம் என்ன?.

பதில்:- மாநில உரிமைகளை காக்க வேண்டும். மாநிலத்துக்கு தேவையான திட்டங்களை பெற வேண்டும். மாநில வளர்ச்சி முக்கியம். தேசிய கட்சிகளின் பார்வை தேசிய அளவில் மட்டுமே உள்ளது. அவர்கள் இன்னும் மாநில அளவுக்கு வரவில்லை. அவர்கள் வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு சிறப்பு திட்டம் என்ற பெயரில் பல்வேறு உதவிகளை செய்கிறார்கள். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலத்திற்கு அந்த சிறப்பு திட்டத்தை வழங்குவது கிடையாது. அதனால் மாநிலங்கள் வளர்ச்சி தடைபடுகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றால், நாங்கள் கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டால்தான் நம்முடைய உரிமைகளை நாடாளுமன்றத்தில் நிலைநாட்ட முடியும்.

தமிழ்நாட்டு மக்களை பாதித்தால் எதிர்ப்போம்

* கேள்வி:- உங்களைவிட மத்திய அரசை தி.மு.க. தீவிரமாக எதிர்க்கிறதே?.

பதில்:- நாங்கள் கூட்டணியில் இருந்தோம். கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டியது ஒரு கட்சியின் நீதி. ஆனால், தி.மு.க.போல் உள்ளடி வேலை செய்ய மாட்டோம்.

காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார்கள். முதலில் எவ்வளவு அரசாங்கத்துடன் இருந்தார்கள். ஐ.கே.குஜ்ரால் இருந்தார். இப்படி, பல அரசாங்கத்தில் இருந்து அவ்வப்போது வாபஸ் வாங்கினார்கள். இது உள்ளடி வேலைதானே.

அ.தி.மு.க. அதுபோல் எப்போதும் நடந்துகொள்ளாது. கூட்டணியில் இருக்கும்வரை கூட்டணி தர்மத்தை கடைபிடிப்போம். கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம். தமிழ்நாடு மக்களை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தை மத்திய அரசு எடுத்தாலும் அதை முழுமையாக எதிர்த்து முறியடிப்போம்.

வெளிப்படையான அழைப்பு

* கேள்வி:- அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. கூட்டணி கதவுகள் திறந்திருக்கிறது என்று வெளிப்படையாக தெரிவித்தார்களே?.

பதில்:- நாங்கள் கூட நிறைய கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்றுதான் நினைத்தோம். அப்படிதான் எல்லா கட்சிகளும் நினைப்பார்கள்.

கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை

* கேள்வி:- பிரதமர் மோடி தந்தி டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெறாததற்கு அ.தி.மு.க.தான் வருத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளாரே?

பதில்:- கூட்டணியை நம்பி அ.தி.மு.க. ஒருபோதும் இருந்தது கிடையாது. கூட்டணிக்கு ஒரு கட்சி வந்தால் வரவேற்போம். வரவில்லையென்றால் கவலைப்பட மாட்டோம்.

பா.ஜ.க.வுக்குதான் இழப்பு

* கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வராதது வருத்தமா? இழப்பா?.

பதில்:- பா.ம.க. வராதது அவர்களுக்குதான் இழப்பு. எங்களுக்கு ஒன்றும் இழப்பு கிடையாது.

* கேள்வி:- இது பா.ஜ.க.வுக்கும் பொருந்துமா?

பதில்:- நிச்சயம் அவர்களுக்கும் பொருந்தும். ஒரு சட்டசபை உறுப்பினர் கூட இல்லாத கட்சி. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டதால்தான் அவர்களுக்கு 4 சட்டசபை உறுப்பினர்கள் கிடைத்தனர். அவர்களின் கருத்துக்களும் சட்டசபையில் ஒலிக்கிறது.

ஓ.பன்னீர் செல்வம் உள்குத்து வேலை செய்தார்

* கேள்வி:- நீங்கள் முதல்-அமைச்சராக இருந்த காலம் சவாலான காலக்கட்டம் தானே?.

பதில்:- நிச்சயம் அது மிகப்பெரிய சவாலான காலம். நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்கும்போது யார்-யார் எல்லாம் உள்குத்து வேலை செய்தார்கள் என்று அன்றில் இருந்து இன்று வரை அடையாளம் காட்டப்பட்டு இருக்கிறார்கள்.

* கேள்வி:- யார், யாரெல்லாம்...

பதில்:- இப்போது யார், யாரோ வெளியே சென்று சுயேச்சையாக போட்டிருக்கிறார்கள். 5 ஓ.பி.எஸ் (ராமநாதபுரம் தொகுதி) நிற்கிறார்கள். அதில் பிரதான வேட்பாளர்.

4 ஓ.பி.எஸ்.கள்

* கேள்வி:- மற்ற 4 ஓ.பி.எஸ்.களை நீங்கள்தான் நிற்க வைத்தீர்கள் என்கிறார்களே?.

பதில்:- அப்படியெல்லாம் கிடையாது. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமென்றாலும் போட்டியிடலாம். அவர்கள் விருப்பம் போட்டியிடுகிறார்கள்.

ரகசிய கூட்டணியா?

* கேள்வி:- தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. 'ஜெராக்ஸ்' எடுத்து வெளியிட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளாரே?.

பதில்:- நிச்சயமாக இல்லை. 2 தேர்தல் அறிக்கையிலும் பல அறிவிப்புகள் வேறுபட்டு இருக்கும். சில அறிவிப்புகள் ஒன்றாக இருக்கும். ஏனென்றால் எல்லா கட்சிகளிடமும் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை எடுத்து வைப்பார்கள். எனவே எங்களுடைய தேர்தல் அறிக்கை தி.மு.க. தேர்தல் அறிக்கை போன்று இருக்கிறது என்று சொல்வது தவறு. நாங்கள் காப்பி அடிக்கவில்லை.

* கேள்வி:- தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறதா?

பதில்:- தேசிய கட்சிகள் காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டை மாற்றந்தாய் மனப்பான்மையுடன்தான் பார்க்கிறார்கள்.

அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே ரகசிய கூட்டணியா?

* கேள்வி:- அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே ரகசிய கூட்டணி என்று சொல்கிறார்களே?.

பதில்:- ரகசிய கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் ஏன் எதிர்த்து போட்டியிடுகிறோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எனவேதான் இதுபோன்ற கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதெல்லாம் வேண்டுமென்றே மக்களை திசை திருப்புவதற்காக பரப்பப்படும் பொய்யான பிரசாரம்.

அ.தி.மு.க.- தி.மு.க. இடையேதான் போட்டி

* கேள்வி:- தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் உங்களுடைய பிரதான எதிரி தி.மு.க.வா, பா.ஜனதாவா?.

பதில்:- பிரதான எதிரி தி.மு.க.தான். அ.தி.மு.க.- தி.மு.க. இடையேதான் போட்டி.

அ.தி.மு.க. வாக்குகளை பா.ஜ.க. இழுக்கிறதா?

* கேள்வி:- அ.தி.மு.க.வின் வாக்குகளை பா.ஜ.க. கொஞ்சம், கொஞ்சமாக இழுப்பதாக கூறப்படுகிறதே?.

பதில்:- அ.தி.மு.க.வுக்கு என்று தனி சிறப்பு, தனி வாக்கு வங்கி இருக்கிறது. எனவே எங்களுடைய வாக்குகளை எவராலும் எடுத்துக்கொள்ள முடியாது. அது கற்பனை.

* கேள்வி:- அ.தி.மு.க. வேட்பாளர்களில் பலர் புதிய முகமாக இருக்கிறார்களே, தேர்தலில் போட்டியிட மூத்த நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லையா?

பதில்:- பல ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தவர்களை தேர்ந்தெடுத்துதான் வேட்பாளர்களாக அறிவித்துள்ளோம்.

* கேள்வி:- தி.மு.க. வேட்பாளர்களில் பலர் வி.ஐ.பி.க்களாக இருக்கிறார்களே?

பதில்:- அவர்கள் பணம் படைத்தவர்கள். ஆயுட்கால நாடாளுமன்ற வேட்பாளர்களாக இருக்கிறார்கள்.

* கேள்வி:- பா.ஜ.க. கூட்டணியிலும் முன்னாள் கவர்னர்கள், இந்நாள் தலைவர்கள் வேட்பாளர்களாக களம் இறங்கி இருக்கிறார்களே?

பதில்:- அந்த கட்சியில் உழைத்தவர்களுக்கு இடம் இல்லை.

நடிகர் விஜய்க்கு வாழ்த்து

* கேள்வி:- நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். அவருக்கு உங்களுடைய அறிவுரை என்ன?

பதில்:- இது ஜனநாயக நாடு. யார் வேண்டும் என்றாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு சேவை செய்வதற்கு தடை கிடையாது. அவர் வந்தால் வாழ்த்துகள்.

* கேள்வி:- 2024-ம் ஆண்டுக்கு பின்னர் கூட்டணி கணக்குகள் மாறுமா?

பதில்:- அரசியல் சூழ்நிலைகள் மாறுகிறபோது கூட்டணிகள் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.


Next Story